×

பருவம் தவறிய பயிர் சாகுபடியால் நெல் விளைச்சல் குறைந்தது: 424 டன் மட்டுமே கொள்முதல்

ஈரோடு: பருவம் தவறிய பயிர் சாகுபடி மற்றும் நோய் தாக்குதலால் இந்தாண்டு நெல் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் இதுவரை 424 டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பவானிசாகர் அணையில் இருந்து நடப்பாண்டில் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன பகுதிகளுக்கும், மேட்டூர் அணையில் இருந்து மேற்கு கரை வாய்க்கால் பாசன பகுதிகளுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் நெல், மஞ்சள், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டது. இந்தாண்டு நெல் உற்பத்தியை அதிகரிக்க அதிக பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டது. தற்போது, அறுவடை காலம் துவங்கி உள்ள நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய பாசன பகுதிகளில் 15 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் ஏ கிரேடு ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரத்து 905 ரூபாயும், சாதாரண ரக நெல் குவிண்டால் ஆயிரத்து 865 வீதத்திலும் கொள்முதல் செய்ய அறிவிக்கப்பட்டது.

நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் இதுவரை 424 மெட்ரிக் டன் அளவிற்கே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பருவம் தவறிய பாசனம் மற்றும் நெல்லை தாக்கியுள்ள நோயினால் விளைச்சல் குறைந்து விட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். வழக்கமாக, நெல் அறுவடை காலங்களில் அதிகளவில் நெல் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு போதிய நெல் விளைச்சல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் குறுவை, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களில் விவசாய பணிகள் நடந்து வருகிறது. இந்தாண்டு பாசனத்திற்கு உரிய காலத்தில் தண்ணீர் திறக்க பவானிசாகர் அணையில் தண்ணீர் இல்லை. பருவம் தவறிய நெல் சாகுபடியால் நெல்லில் புகையான், கழுத்துவெட்டு, எலிக்கடி போன்ற பிரச்னைகளால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 2 ஆயிரத்து 500 கிலோ வரை நெல் விளைச்சல் இருக்கும். ஆனால் இந்தாண்டு ஆயிரத்து 500 கிலோ என்ற அளவிற்கே உள்ளது.

இதேபோல், நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் சன்ன ரகத்திற்கு 65 ரூபாயும், மோட்டா ரகத்திற்கு 65ம் என கடந்தாண்டு விலையை விட உயர்ந்துள்ளது.இந்த கொள்முதல் விலை விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாமல் உள்ளது. நடவுகூலி கடந்தாண்டு 3 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இந்தாண்டு 6 ஆயிரம் ரூபாயாக உயர்ந்து விட்டது. மேலும் உரம், பூச்சி மருந்துகளின் விலையும் கணிசமாக உயர்ந்து விட்டதால் நெல் சாகுபடி விவசாயிகளுக்கு இழப்புதான் ஏற்படுகிறது. உற்பத்தி செலவை கணக்கிட்டு விலையை நிர்ணயம் செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த பருவத்திற்கு ஏற்ப பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Paddy , Paddy, yields declined
× RELATED நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர்...