×

மகாராஷ்டிரா மாநில தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுக்கு கிலியூட்டும் அறை எண் 602

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத் தலைமைச் செயலகமான மந்த்ராலயா கட்டிடத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த 602வது எண் அலுவலக அறை அனைத்து அமைச்சர்களுக்கும் கிலியூட்டி வருகிறது. இதற்கு முன்பு இந்த அறையை பெற்ற அமைச்சர்கள் யாரும் அதிக நாள் பதவியில் நீடித்தது கிடையாது என்பதால், 602வது எண் அறை தங்களுக்கு வேண்டவே வேண்டாம் என தற்போதைய அமைச்சர்கள் அனைவரும் ஒதுங்கி போகிறார்கள்.மந்த்ராலயாவின் 6வது மாடிதான் அதிகாரம் மிக்கதாக விளங்குகிறது. இந்த மாடியில்தான் முதல்வர் அறை (எண் 601), அமைச்சரவையில் முதல்வருக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இருக்கும் மூத்த அமைச்சரின் அறை (எண் 602) மற்றும் தலைமைச் செயலாளர் அறை உள்ளது. முந்தைய பாஜ-சிவசேனா கூட்டணி ஆட்சியின் போது 2014ம் ஆண்டு அப்போதைய வருவாய் மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஏக்நாத் கட்சேக்கு 602வது எண் அலுவலக அறை ஒதுக்கப்பட்டது. அமைச்சரவையில் முதல்வருக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இருந்ததால் ஏக்நாத் கட்சேக்கு இந்த அறை ஒதுக்கப்பட்டது. ஆனால், நிலபேர ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஏக்நாத் கட்சே ஒன்றரை ஆண்டில் பதவி விலக நேரிட்டது. அதன் பிறகு இந்த அறை ஒரு மாத காலம் காலியாக இருந்தது.

பின்னர் வேளாண்துறை அமைச்சராக பொறுப்பேற்ற மூத்த பாஜ தலைவர் பாண்டூரங் புண்ட்கருக்கு இந்த அறை ஒதுக்கப்பட்டது. ஆனால், இரண்டே ஆண்டுகளில் அதாவது 2018, மே மாதம் திடீர் மாரடைப்பால் பாண்டூரங் புண்ட்கர் மரணமடைந்தார். அதன் பின்னர் 2019, ஜூன் மாதம் வரை இந்த அறை காலியாகவே இருந்தது. அப்போது பாஜ.வைச் சேர்ந்த அனில் போண்டேயிடம் வேளாண்துறை ஒப்படைக்கப்பட்டதால் அவருக்கு 602வது எண் அறை ஒதுக்கப்பட்டது. ஆனால், அக்டோபரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விதர்பாவில் உள்ள தனது சொந்த தொகுதியான மோர்ஷியில் அவர் தோல்வியடைந்தார்.2014 தேர்தலுக்கு முன்பு அப்போதைய துணை முதல்வர் அஜித் பவாருக்கு இந்த அறை ஒதுக்கப்பட்டது. ஆனால், ஓராண்டு காலம் மட்டுமே அஜித் பவார் அந்த அறையை அலுவலுக்கு பயன்படுத்தினார். அதற்குள் தேர்தல் நடைபெற்ற காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை இழந்தது. அந்த வகையில் 602வது எண் அறையில் எந்த அமைச்சரும் முழு பதவிக்காலத்தையும் கழித்ததில்லை.

இந்த எதிர்மறையான சென்டிமென்ட்தான் இப்போதைய அமைச்சர்களுக்கு கிலியூட்டி வருகிறது. கடந்த நவம்பர் 28ம் தேதி முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் 6 அமைச்சர்கள் பதவியேற்ற போதிலும், அவர்களில் யாருக்கும் இந்த அறை ஒதுக்கப்படவில்லை. இப்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதால் அனைத்து அமைச்சர்களுக்கும் அலுவலக அறைகள் ஒதுக்கியாக வேண்டும். 602வது எண் அறையை தவிர்த்தால் மந்த்ராலயாவில் இடப்பற்றக்குறை ஏற்படும். இதனால், யாராவது மூத்த அமைச்சருக்கு இந்த அறை ஒதுக்கப்பட வேண்டும்.3 ஆயிரம் சதுரஅடி பரப்பளவை கொண்ட இந்த அறையில் விசாலமான கூட்ட அரங்கம், உட்புற கேபின், அமைச்சக ஊழியர்களுக்கான அறைகள் உள்ளன. மூத்த அமைச்சர் மற்றும் துணை முதல்வர் என்ற முறையில் அஜித் பவாருக்கு இவ்வளவு பெரிய அலுவலக அறை தேவைப்படும் என்பதால் அதனை கருத்தில் கொண்டு அவருக்கு இந்த அறை ஒதுக்கப்படும் என்று மந்த்ராலயா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பழைய சென்டிமென்ட்களை பொருட்படுத்தாமல் இந்த அறையை அஜித் பவார் ஏற்றுக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags : ministers ,Maharashtra State Secretariat , Room number 602 , ministers, Maharashtra State, Secretariat
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...