×

பள்ளி விடுமுறையையொட்டி குரங்கு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் வால்பாறை, டாப்சிலிப், குரங்கு அருவி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் உள்ளன. இங்குள்ள சுற்றுலா பகுதிகளை காண, கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். இதில் பொள்ளாச்சியை அடுத்த குரங்கு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து பல மாதமாக தொடர்ந்து பெய்த பருவமழையால் குரங்கு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாமல் இருந்தாலும், அருவியில் தண்ணீர் ரம்மியமாக கொட்டுகிறது. இதனால் தினமும் சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 23ம் தேதி முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால், அன்று முதல் குரங்கு அருவிக்கு உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. குரங்கு அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், அவர்கள் அடர்ந்த வனத்திற்குள் செல்வதை தவிர்க்க, வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இப்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும், குரங்கு அருவிக்கு சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதன் மூலம், சுற்றுலா பயணிகளிடம் இருந்து பெறப்படும் கட்டண தொகை ரூ.3.50 லட்சம் வரை வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. நாளை ஆங்கில புத்தாண்டு மற்றும் நாளை மறுநாள் 2ம் தேதி வரை என தொடர்ந்து பள்ளி விடுமுறையால், அந்நேரத்தில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகமாக இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

அதுபோல், பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு கடந்த ஒரு வாரமாக உள்ளூர் சுற்று வட்டார பகுதியிலிருந்தும் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், பழனி, கேரள உள்பட வெளியூர்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தற்போது அரையாண்டு பள்ளி விடுமுறை என்பதால் சனி மற்றும் ஞாயிறு நாட்களை தவிர பிற நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.இதில் நேற்றும் பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. டிக்கெட் எடுக்கும் கவுன்டரில், சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் வெகுநேரம் நின்று டிக்கெட் எடுத்து சென்றனர். ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் நேற்று அதிகளவில் வந்திருந்ததால் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். விடுமுறை நிறைவடைந்து பள்ளி திறக்க இன்னும் சில நாட்கள் இருப்பதால், வரும் 2ம் தேதி வரை சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Monkey Falls ,school holidays , School holidays, Monkey Falls, tourists
× RELATED குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு