×

ஜிஎஸ்டி வரி சம்பந்தமாக வணிகர்களுக்கு எதிரான முடிவு எடுத்தால் அகில இந்திய வணிகர் சம்மேளன மாநாட்டில் போராட்டம் அறிவிக்கப்படும்: விக்கிரமராஜா அறிவிப்பு

சென்னை: ஜிஎஸ்டி வரி சம்பந்தமாக வணிகர்களுக்கு எதிரான முடிவு எடுத்தால், அகில இந்திய வணிகர் சம்மேளன மாநாட்டில் போராட்டம் அறிவிக்கப்படும் என்று விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில கூறியிருப்பதாவது:   ஜி.எஸ்.டி வரிவிதிப்பு அமலாக்கம் செய்யப்பட்டு இந்த 2 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி வரிச்சட்டங்கள் 98 முறைக்கு மேல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. வணிக விரோதத் சட்ட திட்டங்கள் நிச்சயம் மாற்றப்பட வேண்டும் என்பது தான் பேரமைப்பின் கோரிக்கை. ஆனால் மாற்றம் செய்யப்படும்போது வணிகர்களுக்கு அதற்குரிய முறையை விழிப்புணர்வு மூலம் ஏற்படுத்த வேண்டும். கால வரம்புக்குள் ரிட்டன் தாக்கல் செய்யப்படவில்லை என்றால் சட்ட பிரிவு 62ன் கீழ் பெஸ்ட் ஆப் ஜட்ஜ்மெண்ட், சட்டப்பிரிவு 78, 79ன் கீழ் சொத்து பறிமுதல், கையகப்படுத்துதல் என்பது ஏதோ கடத்தல்காரர்களை மிரட்டும் தோரணையில்தான் அரசின் செயல்பாடுகள் இருப்பதாக தெரிகிறது.

 பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, பொருளாதாரச் சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பணப்புழக்கம் குறைவு இவையனைத்தாலும் வணிகம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இக்கால கட்டத்தில் ஜி.எஸ்.டி வரி ரிட்டன் தாக்கல் செய்யாமல் தாமதித்தால் சொத்துக்கள் பறிமுதல் என சட்டதிருத்தம் தேவையற்றது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.  அரசு ஜி.எஸ்.டி வரி சம்பந்தமாக, வணிகர்களுக்கு விரோதமான முடிவுகளை எடுக்குமானால், டெல்லியில் ஜனவரி 6,7,8 ஆகிய தேதிகளில் அகில இந்திய வணிகர் சம்மேளனத்துடன் இணைந்து நடத்தும் ஆன்லைன் வர்த்தக எதிர்ப்பு மாநாட்டில் உரிய போராட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : traders ,strike ,All India Merchants Conference ,All India Merchants Federation Conference ,Wickremaraja Announcement , GST Tax, Merchants, Wickremarajah
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து