×

காஷ்மீர்ல வேலை காலியிருக்கு போறீங்களா?: முதல் முறையாக வெளியானது விளம்பரம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்டிருக்கும் இந்த விளம்பரத்தின்படி, நாட்டின் எந்த மாநிலத்தினரும் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது அதற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. மேலும், அம்மாநிலம், லடாக், காஷ்மீர் என்று இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. எனினும், இரு யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவாக காஷ்மீர் உயர் நீதிமன்றம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால், காஷ்மீரில் இனி யார் வேண்டுமானாலும் சொத்து வாங்க முடியும், வேலைவாய்ப்புகளில் சேர முடியும் என்ற நிலை உருவானது.

இந்நிலையில், காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் காலியாக இருக்கும் ஸ்டெனோகிராபர், டைபிஸ்ட், டிரைவர் பணியிடங்கள் என்று மொத்தம் 33 இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மொத்த பணியிடங்களில் 17 இடங்கள் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளது. அதாவது இப்பணியிடங்களுக்கு இந்தியாவில் உள்ள யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்க முடியும்.இதற்கு முன்பு, காஷ்மீரில் எந்த அரசு வேலை வாய்ப்பிலும், வெளிமாநிலத்தினர் யாரும் விண்ணப்பிக்க முடியாது. உள்ளூர் மக்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுவிட்டதால், மற்ற மாநிலங்களில் இருப்பது போன்ற நடைமுறை அங்கும் வந்துள்ளது. ஆனால், இந்த பணியிடங்களில் ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு விதிகள்-2005ன் கீழ் உரிய இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது திறமை அடிப்படையிலான தேர்வு இடங்களை தவிர மற்ற இடங்கள் இடஒதுக்கீடு செல்கிறது.

Tags : Kashmir , want ,work , Kashmir ,Advertising, first time
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!