×

வத்தலக்குண்டுவில் மாணவர்களை அச்சுறுத்தும் குரங்குகள்: கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டுவில் குரங்குகள் விரட்டுவதால் பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கூண்டு வந்தும் குரங்குகளை பிடிக்காமல் வனத்துறையினர் மெத்தனமாக உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகரில் 5000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி பள்ளி மாணவி, மாணவிகள் காந்திநகர் மெயின்ரோடு, டென்னிஸ் கிளப் சாலை இவற்றை கடந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும். காந்திநகர் மெயின்ரோட்டில் 7 பள்ளிகள், 4 மருத்துவமனைகள் உள்ளது. இந்த ரோட்டில் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் திரிகின்றன. அவை திடீரென்று சாலையில் இறங்கி பள்ளி மாணவ, மாணவிகள் கையில் கொண்டு செல்லும் டிபன் கேரியர் மற்றும் உணவுப்பொருட்களை பறிக்க வருவதால் மாணவர்கள் அச்சத்தில் ஓடுகின்றனர்.

அப்போது அந்த ரோட்டில் அதிக அளவில் வரும் மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்களில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த மாதம் ஒரு குரங்கு செல்போன் டவரில் மோதி உயிரிழந்து நீண்ட நாள் உடலை அப்புறப்படுத்தாமல் துர்நாற்றம் வீசி, பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக இருந்தது. மிகத் தாமதமாக வனத்துறையினர் வந்து இறந்த குரங்கு உடலை அப்புற்படுத்தினர். அப்போது அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதை ஏற்றுக் கொண்ட வனத்துறையினர் அதன் பின்னர் குரங்குகளை பிடிக்க வரவேயில்லை. குரங்குகளை பிடிக்க சிறுமலையிலிருந்து கூண்டுவந்தும் வத்தலக்குண்டு வனத்துறையினர் பிடிக்காமல் மெத்தனமாக உள்ளனர்.

பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு குரங்குகளை பிடிக்க கோரிக்கை வைத்து ஒருமாதமாகியும் கூண்டு வைத்துபிடித்து செல்லாததால் பொதுமக்கள் சாலையில் இறங்கி போராடும் திட்டத்தில் உள்ளனர். எனவே வனத்துறையினர் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக வந்து குரங்குகளை பிடித்து செல்ல வேண்டும் என்று வத்தலக்குண்டு காந்திநகர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் சுந்தர் கூறுகையில், நான் குரங்குகள் பள்ளி மாணவ, மாணவிகளை விரட்டும் காட்சியை தினந்தோறும் பார்த்து வருகிறேன். விபத்து ஏற்படும் முன்னர் வனத்துறையினர் குரங்குகளிடமிருந்து பொதுமக்களையும், பள்ளி மாணவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்றார்.

Tags : Watalakundu, Monkeys
× RELATED தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி...