×

தொடர் விடுமுறையையொட்டி அலைமோதிய பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்: போலீசார் இல்லாததால் ஊழியர்கள் திணறல்

திருவண்ணாமலை: பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தரகள் சுவாமி தரிசனம் செய்தனர். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள் என பல்ேவறு பகுதிகளை சேர்ந்தவர்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற தீபத்திருவிழா கடந்த 10ம் தேதி நடைபெற்றது, இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தீபத்திருவிழா நிறைவடைந்து 2 வாரங்களாகியும் அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் விடுமுறை தினத்தில் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது, பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதாலும், சபரிமலை கோயில், மேல்மருத்துவத்தூர் கோயிலுக்கு மாலை அணிவித்து செல்லும் பக்தர்கள் கூட்டமும், பொதுமக்களும் குடும்பத்தினருடன் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதன்படி, விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வழக்கத்தை விட அதிக அளவிலான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. கோயில் ராஜகோபுரம் நுழைவு வாயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கிளிகோபுரம் நுழைவு வாயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோயில் கொடி மரம் அருகே கட்டண தரிசனத்திற்கு செல்லும் வழியில் பக்தர்கள் கூட்டம் திரண்டதால், கட்டண தரிசனம் ₹50க்கான கட்டண சீட்டு வழங்க இரண்டு வழிகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதித்தனர்.

அதேபோல் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். வழக்கத்தை விட கடந்த சில நாட்களாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் கோயில் ஊழியர்கள் திணறி வருகின்றனர். தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் போலீசார் தேர்தல் பணிக்கு சென்றுள்ளனர். இதனால் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் கோயில் ஊழியர்கள் திணறி வருகின்றனர். கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் கை குழந்தையுடன் வந்த பெண்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்த நிலை நேற்று ஏற்பட்டது. கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்து.


துர்க்கை கேட் வழியில் அலைமோதிய கூட்டம்
அண்ணாமலையார் கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் விஐபிக்களை, அலுவலகத்தில் இருந்து அனுமதி சீட்டு பெற்று கோயில் ஊழியர்கள் அழைத்து வருகின்றனர். இவர்கள் வரிசையில் செல்லாமல் வைகுந்தவாயில் வழியாக அழைத்து செல்லப்பட்டு 2ம் பிரகாரத்தில் உள்ள துர்க்கை கேட் வழியாக சென்று சுவாமி சன்னதி அருகே வரிசையில் தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இவர்கள் கட்டண தரிசனம் வழியாக வரும் பக்தர்கள் வரிசையில் இணைக்கப்படுவதால், பக்தர்களிடையே வாக்குவாதம் ஏற்படுவது மட்டுமின்றி தள்ளு முள்ளு ஏற்பட்டது. விஐபிக்கள் என இவ்வழியாக ஏராளமான பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் கட்டண தரிசன வழியில் நீண்ட நேரம் காத்திருந்து வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

கட்டண தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு வரிசையில் எந்தவிதமான இடையூறும் இல்லாத வகையில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். விஐபிக்களுக்கு முக்கியத்துவம் தரும் அதிகாரிகள் கட்டண தரிசனத்திலும், பொது தரிசன வழியிலும் வரும் பக்தர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : vacation ,pilgrims ,Alameda ,Annamaliyar ,Alamodhiya ,holiday ,Annamaliyar temple , A series of holidays, Annamalayar Temple
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்