×

தொழிலில் தொடர் நசிவு காயலான் கடைக்குப் போகும் விசைத்தறிகள்: சோமனூரில் சோகம்

சோமனூர்: கோவை மாவட்டம் சோமனூர் உட்பட பல்வேறு பகுதிகளில் விசைத்தறி தொழில் நசிவுற்ற நிலையில், விசைத்தறியாளர்கள் பழைய இரும்புக்கு (காயலான் கடைக்கு) விசைத்தறிகளை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட சாதாரண விசைத்தறிகள் இயங்கி வருகிறது. பஞ்சுவிலை உயர்வு, நூல் விலை உயர்வு, ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக விசைத்தறி தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இதனால் விசைத்தறி தொழிலை நம்பி வாழ்ந்த விசைத்தறியாளர்கள் பலர், தொழிலை விட்டு விலகி வேறு தொழிலை நாடி செல்ல துவங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அதிநவீன விசைத்தறிகள் அதிகரித்துள்ளது சாதாரண விசைத்தறி தொழில் நலிவடைந்ததற்கு முக்கிய காரணமாக உள்ளது.

ஜப்பான், ஜெர்மனி, உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலமாக இந்தியாவிற்கு அதிநவீன விசைத்தறிகளான ஏர்ஜெட், சல்ஜர், ரேப்பியர் உள்ளிட்ட தறிகள் வந்துள்ளன. இவ்வகையான அதிநவீன விசைத்தறிகள் மற்ற சாதாரண ஒரு விசைத்தறி காட்டிலும் ஐந்து முதல் பத்து மடங்கு வேகத்துடன் இயங்குவதால் உற்பத்தியும் அதிகமாக கிடைக்கிறது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிநவீன விசைத்தறிகள் தற்போது இயங்கி வருகிறது. இவற்றின் உரிமையாளர்கள் அனைவருமே சொந்தமாக துணி உற்பத்தி செய்து விற்பனை செய்யக்கூடியவர்கள் என்பதால் இவர்களுக்கு கூலி பிரச்னை இல்லை. இதனால் இந்த விசைத்தறி இயக்குவதற்கு அதிக சம்பளம் கிடைப்பதால் இதனை இயக்க தடையின்றி தொழிலாளர்கள் கிடைக்கின்றனர். இதற்கு நேர் மாறாக காலம் காலமாக இயங்கி வரக்கூடிய சாதாரண விசைத்தறி தொழில் உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டில் இருந்து கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு கேட்டு பல்வேறு வகையில் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து எந்தவித கூலி உயர்வும் கிடைக்காததால் விசைத்தறியாளர்கள் வேதனையில் வேறு தொழிலுக்கு மாற்றமடைய முயற்சித்து வருகின்றனர். அதிலும் பல்வேறு விசைத்தறியாளர்கள் தங்களுடைய விசைத்தறிகள் கேட்பாரற்று கிடப்பதால் அவைகளை பழைய இரும்புக்கு (காயலான் கடைக்கு) போடக்கூடிய நிலைமை தொடர்கிறது. தற்போது இரும்பு கிலோ ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகின்றது. விசைத்தறி ஒன்று 400 கிலோ முதல் 450 கிலோ வரை எடை கொண்டது. இதனால் விசைத்தறி உதிரி பாகங்களை பொறுத்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விலை போகிறது.

கடந்த 10 ஆண்டுக்கு முன் ஒரு லட்ச ரூபாய் வரையில் விலை கொடுத்து வாங்கிய விசைத்தறிகள் தற்போது 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாவது விசைத்தறியாளர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. துணி விலை வீழ்ச்சியின் காரணமாக பல்வேறு ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தம் செய்துள்ளனர் மேலும் சில விசைத்தறியாளர்கள் தங்களுடைய விசைத்தறிகள் எண்ணிக்கையை பாதியாக குறைத்துள்ளனர். இதனால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழில் நடத்த முடியாதவர்கள் தங்களுடைய தறிகளை பழைய இரும்புக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

Tags : shop ,Kaylan ,Kaylan Shop , In the industry, continuous nihilism, kalayan shop, looms
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி