×

ஆலங்குளம் சாலை உப்புபட்டி ஓடையில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

சிவகாசி : வெம்பக்கோட்டை ஒன்றியம் உப்புபட்டியில் தரை பாலம் உள்ளது. புளிப்பாறைபட்டி, கிளியம்பட்டி, மம்சாபுரம், காக்கிவாடன் பட்டி பகுதி கிராமங்களில் பெய்யும் மழைநீர் வைப்பாற்று ஓடை வழியாக உப்புபட்டியை கடந்து வெம்பக்கோட்டை அணை பகுதிக்கு செல்கிறது. இதனால் மழை காலங்களில் இந்த ஓடையில் 6 அடி வரை வெள்ள நீர் கரைபுரண்டு ஓடும். உப்புபட்டி ஓடை ஆலங்குளம் செல்லும் சாலையில் அமைந்துள்ளதால் மழை காலங்களில் இந்த ஓடையில் மழைநீர் சென்றால் வாகனங்கள் சாலையை கடந்து செல்ல சிரமப்படுகின்றன.

 இதேபோல் ஆலங்குளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எட்டாக்காபட்டி, எதிர்கோட்டை, உப்புபட்டி, காக்கிவாடன் பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து மாணவ மாணவிகள் சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மழை காலங்களில் மாணவர்கள் இந்த ஓடையை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். உப்புப்பட்டி ஓடை ஆலங்குளம் சாலையில் இருந்து 4 அடி பள்ளத்தில் உள்ளது. சாலை மேட்டு பகுதியில் உள்ளதால் மழைநீர் 2 அடி சென்றால் கூட வாகனங்கள் ஓடையை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. மழை காலங்களில் பட்டாசு ஆலை வாகனங்களும் செல்ல முடியாமல் சுமார் 20 கி.மீட்டர்தூரம் உள்ள வெம்பக்கோட்டை வழியாக சுற்றி சிவகாசி, தாயில்பட்டி, சாத்தூர் போன்ற இடங்களுக்கு செல்கின்றனர்.

சிவகாசி-ஆலங்குளம் வழித்தடத்தில் அரசு பஸ்கள் அரை மணி நேரத்திற்கு ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் தனியார் பஸ்சும் இயக்கப்பட்டு வருகிறது. உப்பு பட்டி ஓடையில் மழைநீர் சென்றால் சிவகாசியில் இருந்து ஆலங்குளம் செல்லும் பஸ்கள் 10 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆலங்குளத்தில் அரசு சிமென்ட் ஆலை இயங்கி வருகிறது. இங்கு தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்கின்றன. மழை பெய்தால் இந்த வாகனங்களும் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. எனவே சாலையைவிட தாழ்வாக உள்ள உப்புப்பட்டி தரை பால ஓடையில் மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,road saltpetti stream ,sivakasi ,Upupatti Bridge , sivakasi,Alankulam Road,Upupatti Bridge,
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!