×

27 மாவட்டங்களில் 45,336 பதவிகளுக்கு முதல்கட்டமாக நடந்த உள்ளாட்சி தேர்தலில் 76.19% வாக்குப்பதிவு: திருவள்ளூரில் வாக்குச்சாவடி சூறையாடல், வாக்குச் சீட்டுகளுக்கு தீவைப்பு

சென்னை: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. பல இடங்களில் ஆளுங்கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம நபர்களால் வாக்குச்சாவடி சூறையாடப்பட்டு, ஓட்டுச்சீட்டுகளுக்கு தீ வைக்கப்பட்டது பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.  தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக, 156 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி 16ம் தேதி நிறைவடைந்தது. தொடர்ந்து வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியல்படி 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 156 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை  நடந்தது. இதில், 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 2546 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 4700 ஊராட்சி தலைவர் பதவி, 37,830 ஊராட்சி உறுப்பினர் பதவி என மொத்தம் 45,336 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலில் 1.28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. ஒரு வாக்குச்சாவடிக்கு 7 முதல் 8 அலுவலர்கள் வீதம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட 63 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் அந்த வாக்குச்சாவடியில் நடைபெறும் வாக்குப்பதிவு முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டது.   நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பல்வேறு இடங்களில் ஆளுங்கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டத்தில் அதிமுகவினர் வாக்குச்சாவடியை கைப்பற்றி வாக்களித்ததாக புகார்கள் எழுந்தன. ஆனாலும் கிராமப்புறங்களில் விறு விறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. பகல் 1 மணி வரை 42.47 சதவீத வாக்குகள் பதிவானது.  

மாநிலம் முழுவதும் ஆளுங்கட்சியினர் கிராமம் கிராமமாக சென்று பணம், புடவை, குத்துவிளக்கு, எவர்சில்வர் பாத்திரங்கள், கொலுசு உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கியதாக புகார்கள் எழுந்தன. பணம் முழுமையாக வழங்கியதால் பெரிய அளவில் மோதல்கள் எழவில்லை. மதுரை வலைச்சேரிப்பட்டி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுமாயக்குளம் பகுதியில் ஒரு பிரிவினர் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிப்பதை புறக்கணித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  மேலும், பல்வேறு இடங்களில் ஓட்டுப்போட சரியான வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றம் சாட்டி வாக்காளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

திருவள்ளூர் மாவட்டம், ஈக்காடு ஊராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக பிரமுகரின் மனைவி போட்டியிடும் சின்னத்தில் ஏற்கனவே வாக்களித்திருந்த சீட்டுகளை விநியோகம் செய்தது தெரியவந்தது. இதனால் அங்கு ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.  மேலும், கடம்பத்தூர் ஒன்றியம், பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் இரண்டு வாக்குச் சாவடிகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் திடீரென வாக்குப்பெட்டிகளை சூறையாடி உடைத்து வெளியே கொண்டு வந்தனர். அதில் பதிவான வாக்குச்சீட்டுகளை கொட்டி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சூறையாடப்பட்ட இரு வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து, அப்பகுதி மக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். அங்கு பதற்றம் நிலவியது. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் தங்கானூர் கிராம வாக்குச்சாவடியில் ஊராட்சி தலைவருக்கான வாக்குச்சீட்டில் உள்ள குறிப்பிட்ட சின்னத்தில் ஏற்கனவே முத்திரை குத்தப்பட்டிருந்ததால் மற்ற வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். கிருஷ்ணகிரி பாவக்கல் ஊராட்சியின் 21வது வாக்குச்சாவடியில் வாக்குச் சீட்டில் தவறாக சின்னம் பொறிக்கப்பட்டதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இது தவிர தங்கள் பகுதி பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து சில ஊர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஆனாலும் தமிழகம் முழுவதும் நேற்று நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவில் 76.19 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

18,570 பேர் போட்டியின்றி தேர்வு
மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி வாக்குப்பதிவின் போது, சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்தது. இதில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 பேர் போட்டியிட்டனர். இவர்களில் 18,570 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 30ம்தேதி நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 28 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.53,16,290 பறிமுதல் செய்ய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : phase ,polling looting ,Tiruvallur , 27 Districts, Local Elections, Thiruvallur, Polling Station
× RELATED 49 தொகுதிகளில் நடக்க உள்ள 5ம் கட்ட...