×

ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த காலங்களில் ரயில் கட்டண உயர்வு சமாளிக்கக்கூடிய வகையில் இருந்தது. ஆனால், இப்போது அனைத்து வகுப்புகளின் பயணிகள் கட்டணத்தையும் கிலோ மீட்டருக்கு 40 பைசா வீதம் உயர்த்த தொடர்வண்டி வாரியம் திட்டமிட்டிருக்கிறது. இது நினைத்துப் பார்க்க முடியாத அளவு ஆகும். தற்போது, சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு அடிப்படை கட்டணமாக 335 ரூபாயும், முன்பதிவுக்கட்டணம், விரைவு வண்டிக்கான கட்டணம் ஆகியவற்றுக்காக 50 ரூபாயும் சேர்த்து மொத்தம் 385 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ரயில் வாரியம் திட்டமிட்டுள்ளவாறு கிலோ மீட்டருக்கு 40 பைசா உயர்த்தப்பட்டால் சென்னை-திருநெல்வேலிக்கு அடிப்படை கட்டணம் 594 ரூபாயாகவும், பிற கட்டணங்களையும் சேர்த்து 644 ஆகவும் அதிகரிக்கும். இது 77 விழுக்காடு உயர்வு. இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தால், பேருந்து கட்டணத்தை விட மிகவும் அதிகமாக இருக்கும். இவ்வளவு அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க ஏழை, நடுத்தர மக்கள் முன்வர மாட்டார்கள்.

இது துறையின் வளர்ச்சிக்கு வழிவகுப்பதைத் தவிர வீழ்ச்சிக்குத் தான் வழிவகுக்கும். 2002 முதல் 2012 வரையிலான காலத்தில் பயணிகள் கட்டணம் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை. மாறாக, ஒருமுறை தொடர்வண்டி கட்டணம் அடையாளமாக குறைக்கப்பட்டது. அதற்கு பிறகு 7 ஆண்டுகளில் தொடர்வண்டி கட்டணம் 4 முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. 4 முறைகளிலும் சேர்த்து எந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டதோ, அதே அளவுக்கு கட்டண உயர்வை ஒரே முறையில் நடைமுறைப்படுத்த முயல்வது எந்த வகையிலும் நியாயமல்ல. ரயில்வே மக்களுக்கு சேவை வழங்கும் துறையாகும். இதில் லாப நோக்கத்தைப் பார்க்கக்கூடாது. ரயில் இயக்கச் செலவுகளுக்கும், அத்துறையின் வருவாய்க்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை. துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 13 லட்சம் ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக செலவழிக்கப்படும் தொகை தான் அத்துறையின் இழப்புக்கு முக்கியக் காரணமாகும்.

மத்திய அரசின் பெரும்பன்மையான துறைகளின் இன்றைய நிலை இதுதான். ஆனாலும், அத்தகைய துறைகள் மக்களுக்கு நேரடியாக சேவை வழங்குவதால் அந்த இழப்பை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. அதேபோல், தொடர்வண்டித்துறையின் ஓய்வூதிய சுமையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன்மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாகனமாக தொடர்வண்டிகளின் பயணக் கட்டணம் உயர்த்தப்படாமல், இப்போதுள்ள நிலையிலேயே தொடருவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : government ,rail fare hike ,Ramadas Ramadas , Ramadas, urging the government , abandon the rail fare, project
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...