×

டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு

வேலூர்: டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வான டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இச்சட்டம் தமிழகத்தில் 2011ல் நடைமுறைக்கு வந்தது. ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் ‘டெட்’’ தேர்வு எழுதி தேர்ச்சி பெற கடந்த ஜூலை வரை அவகாசம் தரப்பட்டது. அந்த காலக்கெடு முடிவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் 1,747 ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளதாக தெரிய வந்தது. இதையடுத்து டெட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக போதிய வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. மேலும் அதற்கான பயிற்சியும் அரசு சார்பில் அளிக்கப்பட்டது.

எனினும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் சிலர் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தற்போது அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், டெட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை தொடர்ந்து பணியில் வைத்திருக்க முடியாது. அதனால் சிறப்பு தகுதித்தேர்வு நடத்த முடிவாகியுள்ளது. அதற்கான பயிற்சியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்’ என்றனர். அதேநேரத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, தங்களை கருணை அடிப்படையில் பணிக்கால விவரங்களை ஒப்பிட்டு சிறப்பு பயிற்சி வழங்கி தமிழக அரசு டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : teachers ,Ted , Ted exams, for non-proficient teachers. Special Qualification
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...