×

வந்தவாசி, செய்யாறு அருகே வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட காமாட்சியம்மன் விளக்கு, பணம் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி

வந்தவாசி:  திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கி நடந்து வந்தது. இந்நிலையில், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் சார்பில் நடுக்குப்பம் பகுதியில் வாக்காளர்களுக்கு பித்தளை காமாட்சியம்மன் விளக்கு வழங்குவதாக பறக்கும் படை அலுவலர் அரிக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரிக்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் நடுக்குப்பம் கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அதிகாரிகளை பார்த்ததும் காரின் அருகே இருந்த சிலர் தப்பியோடிவிட்டனர். பின்னர், காரை சோதனை செய்தபோது வாக்காளர்களுக்கு வழங்க ₹1.10 லட்சம் மதிப்பிலான காமாட்சியம்மன் விளக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் அலுவலர் காந்திமதியிடம் ஒப்படைத்தனர்.

செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் மண்டல துணை வட்டாட்சியர் அசோக்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் நல்லாளம் கிராமத்திற்கு சென்றனர். அங்கு சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்காக சிலர் வாக்காளர்களுக்கு நேற்று காலை பணம் பட்டுவாடா செய்துகொண்டிருந்தனர். அதிகாரிகளை பார்த்ததும், கையில் இருந்த பணப்பையை தூக்கிவீசிவிட்டு தப்பியோடினர். பின்னர் அதிகாரிகள் பையை எடுத்து பார்த்ததில் 38 ஆயிரம் இருந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இதேபோல், மேல்நெமிலி கிராமத்தில் 8 சிறிய குத்துவிளக்குகளையும் பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

Tags : Vandavasi ,voters ,Door Vandavasi , Vandavasi, Do-Not-Give-Up , Voters
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு