×

கார்கில் போரில் குண்டுமழை பொழிந்தவை விடை பெற்றது மிக்-27 போர் விமானம்: 35 ஆண்டு சேவைக்கு கடைசி சல்யூட்

ஜோத்பூர்: சோவியத் யூனியனின் தயாரிப்பான மிக்-27 போர் விமானம், இந்திய விமானப்படையில்  கடந்த 1985ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. மணிக்கு 1,700 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இவ்விமானம், 4,000 கிலோ வெடிபொருட்களை தாங்கி சென்று தாக்கும் வல்லமை படைத்தது. கடந்த 35 ஆண்டுகளாக இந்திய வான் எல்லையை பாதுகாத்த இந்த விமானங்கள், 1999ம் நடந்த கார்கில் போரில் சிறப்பாக செயல்பட்டு குண்டுமழை பொழிந்தன. உயரமான மலைப்பகுதிகளில் எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தகர்த்து கார்கில் போரில் வெற்றி தேடித்தந்தன. விமான படை விமானிகளால் ‘பகதுார்’ என, செல்லமாக அழைக்கப்படும் இந்த விமானத்தின் பிரிவு உபசார விழா ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் நேற்று நடந்தது.

இதில், விமானப்படையில் கடைசியாக மீதமுள்ள 7 மிக்-27 விமானங்கள் இறுதியாக பறந்து, வானில் பல்வேறு சாகங்களை நிகழ்த்தியது. விழாவில், ஏர்மார்ஷல் எஸ்.கே.கோட்டியா உள்ளிட்ட விமானப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் 165 மிக்-27 விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் வடிவமைத்தாலும், 2010ம் ஆண்டில் 150 விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு, கடைசி ஸ்குவாட்ரானில் 7 விமானங்கள் எஞ்சியிருந்தன. இந்த 7 விமானங்களும் நேற்றுடன் ஓய்வு பெற்றன. வானில் கடைசியாக பறந்து தரையிறங்கிய இந்த விமானங்களுக்கு, விமானப்படை நடைமுறைப்படி இருபக்கத்திலும் இருந்து தண்ணீர் பீச்சியடித்து மரியாதை செலுத்தப்பட்டு, பிரியாவிடை அளிக்கப்பட்டது.

Tags : Cargill battle, bomb, MiG-27 fighter, last salute
× RELATED விமானப்படை வாகனம் மீது பயங்கரவாதிகள்...