×

மது அருந்த பணம் இல்லாததால் பைக் திருடிய இன்ஜினியர் கைது: போதை பழக்கத்தால் பாதை மாறியது

தண்டையார்பேட்டை: சிங்கப்பூரில் உள்ள கல்லூரியில் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்த வாலிபர், மது அருந்த பணம் இல்லாததால் சென்னை பாரிமுனை பகுதியில் பைக் திருடி பிடிபட்டார்.  நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் சையது முகமது (23). சிங்கப்பூரில் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சென்னை கலெக்டர் அலுவலகம் பின்புறமுள்ள டாஸ்மாக் கடையில் சையது முகமது மது அருந்தியுள்ளார். பின்னர் அங்கு நின்ற பைக்கை திருடி செல்ல முயன்றுள்ளார். இதை கண்ட பைக்கின் உரிமையாளர் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சையது முகமதுவை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர். பின்னர், அவரை வடக்கு கடற்கரை போலீசில் ஒப்படைத்தனர்.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது சையது முகமதுவின் தந்தை பிரபல தொழிலதிபர் என்பது தெரிய வந்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள கல்லூரி ஒன்றில் ஏரோ நாட்டிக்கல் படித்து வந்த சையது முகமது கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார்.  இதனால் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு சென்னை வந்துள்ளார். மது அருந்த பணம் இல்லாததால் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : engineer , Alcohol, Money, Engineer, Arrest, Drug
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...