×

குளத்தூர் பகுதியில் வெங்காய விளைச்சல் பாதிப்பு

குளத்தூர் : குளத்தூர் பகுதியில் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதால், கிலோ ரூ.90க்கு விற்பனையாகிறது. குளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான முத்துக்குமாரபுரம், வேடநத்தம், வள்ளியநாயகபுரம், த.சுப்பையாபுரம், வீரபாண்டியபுரம், முள்ளூர், புளியங்குளம், சக்கம்மாள்புரம், சூரங்குடி, வேப்பலோடை ஆகிய கிராம பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் கடந்த பருவமழையில் கம்பு, சோளம், உளுந்து போன்ற பயிர்களுக்கு இடையே ஊடுபயிராக பாகற்காய் மற்றும் வெங்காயம் பயிரிட்டனர்.

இந்நிலையில் தொடர் ந்து பெய்த மழையால் பல கிராமங்களில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகியது. இதில் வெங்காயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது ஊடு பயிராக பயிரிடப்பட்ட வெங்காயம் அறுவடை துவங்கியுள்ளது. இதில் பல கிராமங்களில் வெங்காயம் விளைச்சல் இன்றி காணப்படுவதுடன், அழுகிய நிலையில் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சில இடங்களில் ஓரளவு வெங்காயம் விளைச்சல் உள்ளது. இது வியாபாரிகளிடத்தில் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரைக்கே செல்கிறது. பொதுமக்களிடையே கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அருப்புக்கோட்டை பகுதியில் இருந்தும் வெங்காயம் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: கடந்த பருவமழைக்கு ஊடுபயிராக விதைக்கப்பட்ட வெங்காயம் தொடர்ந்து மழை பெய்ததால் செடிகள் அழுகியது. விதை வெங்காயம் கிலோ ரூ.90 வரை வாங்கி வைத்தும், தற்போது முழுமையாக விளைச்சலின்றி போவதோடு வியாபாரிகளிடம் குறைவான விலைக்கு செல்வதால் வெங்காயத்தால் பெரும் நஷ்டமே மிச்சமாக உள்ளது. இப்பகுதியில் பாதிக்கப்பட்ட நிலங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரண தொகை வழங்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Tags : area ,Klathoor ,Kulathur Region , Onion ,Onion Yield,Kulathur ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...