×

கடலூரில் பறக்கும் படை சோதனை: ரூ.3.30 லட்சம் மதிப்புள்ள காமாட்சி விளக்குகள் பறிமுதல்

கடலூர்: கடலூரில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ. 3.30 லட்சம் மதிப்பிலான காமாட்சி விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் நாளை(27ம் தேதி) மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 14 ஒன்றியத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 16,604 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் பணியில் 21 பறக்கும் படைகள் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இதைதொடர்ந்து வாக்காளர்களுக்கு இலவச பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்கள் அதிகளவில் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் கடலூர் ஒன்றியத்தில் நாளை (27ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு இலவசமாக பொருள்கள், பணம் போன்றவற்றை தருவதை தடுக்கும் வகையில், தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் தாசில்தார் கீதா தலைமையில் உதவி ஆய்வாளர் எழில்குமார், ராஜகோபாலன், வெங்கடாசலம் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது புதுவை மாநிலம் வில்லியனூரில் இருந்து கடலூரை நோக்கி வந்த காரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காருக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காமாட்சி விளக்குகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காரை ஓட்டி வந்த ஓட்டுநர் சண்முகப்பிரியனை விசாரணை செய்தனர். அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அவரிடமிருந்து 1,350 காமாட்சி விளக்குகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட காமாட்சி விளக்குகள் சம்பந்தப்பட்ட ஒன்றிய தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் வாக்காளர்களுக்கு காமாட்சி விளக்குகள் வழங்குவதற்கு கொண்டுவரப்பட்டதா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.

Tags : Cuddalore ,Flying Cadre , Cuddalore, Flying Squadron, Experiment, Lust Lights, Seize
× RELATED கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை வெட்டி கொன்ற கணவன்