×

வேலூர் கஸ்பாவில் ரூ.5 கோடியில் பல்நோக்கு விளையாட்டு மைதான பணிகள் துவக்கம்

* 9 மாதங்களில் முடிக்க திட்டம்

வேலூர் : வேலூர் கஸ்பாவில் ரூ.5 கோடியில் பல்நோக்கு விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள விளையாட்டு மைதானத்துக்கு சொந்தமான இடத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், பிற நகரங்களிலும் விளையாட்டு மைதானங்கள், உள்அரங்க விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள் என அமைந்துள்ளன. அதேபோல் வேலூர் இன்பென்டரி சாலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ் நேதாஜி ஸ்டேடியம் இருந்தது.

தமிழ்நாடு ஆயுதப்படை மைதானமாக அது மாறிய பின்னர், வேலூரில் நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகள், பயிற்சிகள் கோட்டையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானம் மற்றும் பாகாயத்தில் உள்ள சிஎம்சி விளையாட்டு மைதானம் என நடந்து வருகிறது. எனவே, விளையாட்டையும், விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிப்பதற்கு என்று தனியாக அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கம் வேண்டும் என்று வேலூர் நகர மக்கள் மட்டும் இன்றி மாவட்ட மக்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, காட்பாடியில் 40 ஏக்கரில் அரசுக்கு சொந்தமான இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான ஆலோசனைகளும், ஆய்வும் நடத்தப்பட்டது. பல்வேறு காரணங்களால் அப்பணி தடைப்பட்ட நிலையில், விருதம்பட்டில் பாலாற்றங்கரை ஓரம் மாநகராட்சிக்கு சொந்தமான 46 ஏக்கர் இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அதுவும் கைவிடப்பட்டது.

கடைசியில் கஸ்பாவில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு சொந்தமான 4.88 ஏக்கர் நிலத்தில் சர்வதேச தரத்துடன் நீச்சல் குளத்துடன் கூடிய உள்விளையாட்டு அரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதுவும் ஏதோ காரணங்களால் கைவிடப்பட்ட நிலையில் ஊசூரில் வனத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு சொந்தமான இடம் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான வரைபடமும் தயார்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் காட்பாடியில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 40 ஏக்கர் நிலத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சுமார் ₹14.5 கோடியில் பல்நோக்கு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் வேலூர் மாநகராட்சி கஸ்பாவில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு சொந்தமான 4.88 ஏக்கர் நிலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹5 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகள் நேற்று தொடங்கின. முதலில் தடகள போட்டிகள் நடத்துவதற்கான களம் அமைக்கப்படுகிறது. தொடர்ந்து வாலிபால், புட்பால், கூடைப்பந்து அரங்கங்களும், நவீன உடற்பயிற்சி கூடம், ஸ்கேட்டிங் மைதானம், கிரிக்ெகட் விளையாடுவதற்கான பிட்ச், பார்வையாளர் மாடம், விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வறைகள், கழிவறை கட்டிடம் என பல்வேறு அம்சங்களும் இப்பல்நோக்கு விளையாட்டு மைதானத்தில் அமைகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

வேலூர் கஸ்பாவில் அமைய உள்ள விளையாட்டு மைதானத்தில் அதன் கிழக்கேயும், மேற்கு பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் தொடர்பாக மாநகராட்சி இதுவரை எந்த துரும்பையும் எடுத்து போடவில்லை. அதேபோல் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை மையமும் மைதானத்திலேயே அமைந்துள்ளது. இவற்றையெல்லாம் அகற்றி மைதானத்தை ஒழுங்குப்படுத்தி எல்லை வரையறை ஏற்படுத்திய பின்னர் விளையாட்டு மைதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கஸ்பா பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Vellore Casbah ,Vellore Kaspa Multipurpose Playground Is Being Built , Vellore ,Multipurpose Playground, Smart city,
× RELATED சென்னை விமானநிலையத்தில் நடிகர்...