×

சென்னை விமானநிலையத்தில் நடிகர் கருணாஸ் கைப்பையில் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்: பயணம் ரத்து

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இன்று காலை விமானம் மூலமாக திருச்சி செல்லவிருந்த பிரபல நடிகர் கருணாசின் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, அவரது பயணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இன்று காலை திருச்சி செல்லும் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் தயார்நிலையில் நின்றிருந்தது.

இதில் செல்லவேண்டிய பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். இந்நிலையில், அந்த விமானத்தில் திருச்சி செல்வதற்காக பிரபல நடிகரும் முன்னாள் எம்எல்ஏ மற்றும் முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவருமான கருணாஸ் வந்திருந்தார். அவரது கைப்பையை விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் கருவி மூலம் பரிசோதித்தனர்.

இச்சோதனையில், அந்த கைப்பைக்குள் வெடிபொருள் இருப்பதற்கான எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதைத் தொடர்ந்து, அந்த கைப்பையை தனியே எடுத்து, அந்தப்பையில் என்ன இருக்கிறது என்று நடிகர் கருணாசிடம் விசாரித்தனர். அதில் ஆட்சேபகரமான பொருட்கள் எதுவுமில்லை என்று கருணாஸ் கூறியுள்ளார். இருப்பினும் அந்த கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர். அந்த கைப்பைக்குள் 2 பாக்ஸ்களில் தலா 20 குண்டுகள் என மொத்தம் 40 லைவ் துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது.

அவை அனைத்தும் கைத்துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய .32 எம்எம் ரக குண்டுகள் என்பதும் தெரியவந்தது. அந்த 40 துப்பாக்கி குண்டுகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் நடிகர் கருணாசிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில், நான் துப்பாக்கி லைசென்ஸ் ஹோல்டர். என்னிடம் உள்ள கைத்துப்பாக்கியில் பயன்படுத்தும் குண்டுகள் இவை. நான் அவசரமாக புறப்பட்டு வந்ததால், எனது கைப்பையில் இருந்த துப்பாக்கி குண்டுகள் இருந்த 2 பாக்ஸ்களையும் கவனிக்கவில்லை.

இதனால், அந்த குண்டுகள் எனது கைப்பையில் தெரியாமல் இருந்துவிட்டது என நடிகர் கருணாஸ் கூறியுள்ளார். மேலும், தனது துப்பாக்கி லைசென்ஸ், அதுதொடர்பாக புதுப்பித்த ஆவணங்களையும் நடிகர் கருணாஸ் காட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து, நடிகர் கருணாசின் திருச்சி பயணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்து, அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் திருச்சி செல்ல வேண்டிய இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சுமார் அரைமணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு நிலவியது.

The post சென்னை விமானநிலையத்தில் நடிகர் கருணாஸ் கைப்பையில் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்: பயணம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Karunas ,Chennai airport ,Meenambakkam ,Trichy ,Karunas' ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் நடிகர்...