×

தங்காடு - எடக்காடு சாலையில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி

*முறையாக சீரமைக்காததால் விபத்து அபாயம் நீடிப்பு

ஊட்டி :   ஊட்டி அருகே தங்காடு - எடக்காடு சாலையில் மண்சரிவு முறையாக சீரமைப்படாத நிலையில் மீண்டும் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதால் விபத்து ஏற்பட கூடிய அபாயம் உள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கிய பருவமழை இரு மாதங்களுக்கும் மேலாக வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டியது. இந்த மழையால் கூடலூர், பந்தலூர் பகுதிகளும், குந்தா தாலுக்காவிற்குட்பட்ட அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்தன. இந்த பருவமழையின் போது தங்காடு - எடக்காடு சாலையில் பிக்குளி பாலம் பகுதியில் கொண்டை ஊசி வளைவில் பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டது.

சாலையின் கீழ் பகுதியில் உள்ள சில்லஹல்லா ஆறு வரை சுமார் 100 அடி வரை மண் சரிந்தது. கொண்டை ஊசி வளைவு என்பதால் அரசு பஸ்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக இப்பாதையில் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. இன்னும் தடுப்புசுவர் கட்டப்படாத நிலையில் வெறும் மணல் மூட்டைகள் மட்டுமே அடுக்கி தற்காலிகமாக சீரமைத்தனர். தற்போது சாலை அந்தரத்தில் தொங்கிய நிலையில் உள்ளது.

எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்காமல் கடந்த சில வாரங்களாக மீண்டும் இப்பாதையில் அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. வளைவான பகுதியில் பஸ் திரும்பும் போது அச்சத்துடனேயே செல்ல வேண்டிய சூழல் உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் தடுப்புசுவர் கட்டி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். தற்போது போக்குவரத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரிய அளவிலான விபத்து ஏற்பட கூடிய அபாயம் நீடிக்கிறது. எனவே விபத்துகளை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 இது குறித்து ஓட்டுநர்கள் கூறியதாவது: மழையின் போது வளைவான பகுதியில் பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டது. ஆனால் தடுப்புசுவர் கட்டுவதற்கு பதிலாக மண் மூட்டைகளை அடுக்கியுள்ளனர். எதிர்ப்புறம் ஒரு சில மரங்களை மட்டும் அகற்றி தற்காலிகமாக சீரமைத்துள்ளனர். இந்த இடத்தை அச்சத்துடனேயே கடக்க வேண்டிய நிலை உள்ளது, என்றனர்.

Tags : Thangaadu-Edakkadu Road ,opening ,ooty , ooty ,Thangaadu,Edakkadu , Vehicles
× RELATED குன்னூர், ஊட்டியில் குவிந்த சுற்றுலா...