×

நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரம் பொதுப்பணித்துறை நோட்டீசுக்கு 10 நாளில் விளக்கமளிக்க வேண்டும்

மதுரை: நீர்நிலைகளை பாதுகாக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட அரசின் துறைகளுக்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் நீர்நிலைகளை இயல்பு நிலைக்கு மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக விளக்கம் கேட்டு, மதுரை கிழக்கு தாலுகா பகுதியைச் சேர்ந்த இசக்கி, செல்வம், துரைப்பாண்டி ஆகியோருக்கு, நீர்நிலை பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் சட்டப்படி பொதுப்பணித்துறையின் பெரியாறு பிரதான கால்வாய் உதவிப்ெபாறியாளர் கடந்த 9ம் தேதி நோட்டீஸ் கொடுத்துள்ளார். இந்த நோட்டீசை எதிர்த்து இவர்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்துள்ளனர்.

அதில், சர்வே எண் மற்றும் வரைபட விபரங்கள் எதுவும் குறிப்பிடவில்லை. விளக்கமளிக்க எந்த வாய்ப்பும் தரவில்லை. எனவே, அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர், மனுதாரர்கள் தரப்பில் தங்களது விளக்கத்தை, உதவி செயற்பொறியாளரிடம் 10 நாட்களுக்கு அளிக்க வேண்டும். விளக்கத்தின் அடிப்படையில் உதவி செயற்பொறியாளர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனக் கூறி, மனுவை முடித்து வைத்தனர்.

Tags : Water Levels, Ecoort Madurai Branch, Public Works Department
× RELATED மோடியின் தியான நிகழ்ச்சிக்கு தேர்தல்...