×

கோடை வெயில் சுட்டெரிப்பதால் காவேரிப்பாக்கம் ஏரி நீர்மட்டம் குறைந்தது-பாசனம் பாதிப்பதாக விவசாயிகள் கவலை

காவேரிப்பாக்கம் : தமிழகத்தில் செம்பரம்பாக்கம் ஏரி, மதுராந்தகம் ஏரியை, அடுத்தபடியாக 3வது பெரிய ஏரியாகவும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரமாண்ட  ஏரியாகவும் விளங்கி வருவது காவேரிப்பாக்கம் ஏரியாகும். இந்த ஏரி மூன்றாம் நந்திவர்மன் பல்லவன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டுள்ளது. ஏரியின் மொத்த பரப்பளவு சுமார் 3,968 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. ஏரியானது ஒரு முறை நிரம்பி வழியும் காலங்களில்  அதன் மொத்த நீர் கொள்ளவு 41.601- மி.க.லிட்டர் கொண்டிருக்கும். இப்படி ஏரி நிரம்பி வழியும் காலங்களில் விவசாயிகள்  மூன்று போகம் அறுவடை செய்து வருகின்றனர்.இந்த ஏரி நிரம்பி வழியும் காலங்களில் நரிமதகு, சிங்கமதகு, மூலமதகு, பள்ளமதகு, உள்ளிட்ட 10 மதகுகள் வாயிலாக, கால்வாய் மூலம் நேரடியாக தண்ணீர் பெறப்பட்டு சுமார் 6,278 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுகின்றன. மேலும் கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்  பெய்த மழையின் காரணமாகவும், பாலாற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாகவும், காவேரிப்பாக்கம் அடுத்த அணைக்கட்டு பகுதியில் இருந்து ஏரிக்கு சுமார் 1,500  கன அடி தண்ணீர் வந்து கொண்டு வரப்பட்டு,  ஏரியில்  28 அடி அளவுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டன. இருப்பினும் ஏரியின் முழு கொள்ளளவான 30.6 அடி உயரத்தை எட்டப்படவில்லை.இருப்பினும் அரசு அதிகாரிகள் கடைவாசல் பகுதியில் உள்ள  57 மதகுகள் மற்றும் மகேந்திரவாடி ஏரிக்கு  9 மதகுகள் என 66 மதகுகள் மூலம் சுமார் 500 கன அடி தண்ணீர் வீதம் திறந்து விடப்பட்டன. இதன் வாயிலாக பெரிவளையம், தர்மநீதி, சிறுவளையம், துறையூர், ரெட்டி வலம், தென்மாம்பாக்கம், வேட்டாங்குளம், புன்னை, உள்ளிட்ட 41 ஏரிகள் பயனடைகின்றன.இந்நிலையில் காவேரிப்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கோடை வெயிலால்,  இந்த ஏரியில்  28 அடியில் இருந்து தற்போது 25 அடிக்கும் கீழ் நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளது. இதனால் காவேரிப்பாக்கம் ஏரி தண்ணீர் விவசாயத்திற்கு மூன்று போகம் வரும் என்று விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில் ஏரி நீர் குறைந்து  வருவது விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் விவசாயிகள் நவரை பருவத்தில் அறுவடை முடித்து,  தற்போது சொர்ணவாரி பருவத்தில் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பருவம் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை வரை தொடரும். தற்போது ஏரி கால்வாய் பாசனம் நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள், சொர்ணவாரி பருவத்திற்கு ஏரி தண்ணீர் கை கொடுக்குமா? என ஐய்யம் எழுந்துள்ளது.விவசாயத்தில்  ஆள் பற்றாக்குறை, மற்றும் நெல் விலை வீழ்ச்சி போன்ற காரணங்களினால் விவசாயம் நலிவடைந்து வருகிறது.  ஏரியிலும் தண்ணீர் வற்றி வருவதால் விவசாயிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரசு அதிகாரிகள் இனிவரும் காலங்களில், அதன் முழு கொள்ளளவு எட்டவும், ஏரியை ஆழப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்….

The post கோடை வெயில் சுட்டெரிப்பதால் காவேரிப்பாக்கம் ஏரி நீர்மட்டம் குறைந்தது-பாசனம் பாதிப்பதாக விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Cauverypakkam ,Lake Sembarambakkam ,Tamil Nadu ,Madhurandakam ,Vellore district ,Dinakaran ,
× RELATED காவேரிப்பாக்கம் அருகே கோடை வெயில்...