×

‘குவார்ட்டர், பிரியாணி, 2 ஆயிரம் ரூபா தந்தா வருவாங்க...’தேர்தல் பிரசாரத்துக்கு ஆளுங்க வேணுமா?வேட்பாளர்களிடம் ஊர் பிரமுகர்கள் வசூல்

திருச்சுழி: விருதுநகர் மாவட்ட கிராமங்களில் முக்கிய பிரமுகர்கள் பிரசாரத்துக்கு ஆட்களை அனுப்பி, தலைக்கு ₹500 முதல் 2 ஆயிரம் வரை வேட்பாளர்களிடம் வசூலித்து வருகின்றனர். குவார்ட்டர், பிரியாணி உத்தரவாதத்துடன் அவர்களும் வேட்பாளர்களுடன் சென்று  வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக நாளை(டிச.27) மற்றும் டிச.30ம் தேதிகளில் நடக்க உள்ளது. ஊராட்சி ஒன்றியங்களுக்கு மட்டும் நடக்கும் இந்த தேர்தல் எம்எல்ஏ, எம்பி தேர்தலை தாண்டி பரபரப்பாக நடந்து வருகிறது. ஊராட்சி தலைவர் பதவிக்கு பல லட்சம் ஏலம், வேட்பாளர் தேர்வுக்கே தேர்தல், கோஷ்டி மோதல், கொலை என தொடர் சம்பவங்கள் நடந்து வந்தன. முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் தொடர்ந்து நடந்து வருகிறது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி, நரிக்குடி பகுதியில் உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பாளர்கள் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். இவர்கள், கிராமங்களில் வாக்கு சேகரிக்க செல்லும்போது, அங்குள்ள முக்கிய பிரமுகர்களை சந்திக்கின்றனர். அவர்கள் தங்களிடம் இருக்கும் 20 முதல் 30 பேர் வரை வேட்பாளர்களுடன் பிரசாரத்துக்கு அனுப்புகின்றனர். இவர்களுக்கு தலைக்கு 500 முதல் 2 ஆயிரம் வரை (ஊரில் பிரபலத்தை பொறுத்து) வேட்பாளர்களிடம் வசூலிக்கின்றனர். மேலும் குவார்ட்டர் மது, சிக்கன், மட்டன் பிரியாணியும் உண்டு. இங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினமும் ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களுடன் கிராமத்தை சேர்ந்த குறிப்பிட்ட நபர்களே வாக்கு கேட்டு வருவதால், யாருக்கு ஓட்டுப்போடுவது என கிராம மக்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆனால், தங்கள் பங்குக்கு பிரசாரத்துக்கு ஆட்களை அனுப்புவதை கிராம பிரமுகர்கள் ஒரு தொழிலாகவே செய்து வருகின்றனர்.மேலும், தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், மாணவர்களையும் பிரசாரத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். வேட்பாளர்களுடன் செல்லும் மாணவர்கள், மது அருந்தும் பழக்கத்துக்கு ஆளாவதாக புகார் தெரிவிக்கின்றனர். உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மதுபானக் கடைகளில்  கூட்டம் இருமடங்கு அதிகரித்துள்ளதாக  டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகின்றனர்.


Tags : Priyani ,election campaign ,Nominees ,personalities , Of quartet, biryani, 2 thousand, candidates
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...