×

கம்பெனி ஊழியரை தாக்கி ரூ.18 லட்சம் பறித்த வழக்கில் சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது

தண்டையார்பேட்டை: சென்னை எம்கேபி நகரை சேர்ந்தவர் முகமது அபுபக்கர் சித்திக். பாரிமுனையில் உள்ள அனிஸ் என்பவரின் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த 12ம் தேதி, தனது அலுவலகத்தில் இருந்து திருவல்லிக்கேணியில் உள்ள அனிஸ் வீட்டிற்கு ரூ.17.91 லட்சத்துடன் பைக்கில் புறப்பட்டார். 2வது கடற்கறை சாலையில் சென்றபோது, ஒரு மர்ம கும்பல், சித்திக்கை தாக்கி, அவரிடம் இருந்த பணப்பையை பறித்து சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் வடக்கு கடற்கரை போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், மண்ணடி பகுதியை சேர்ந்த ஜூஸ் கடைக்காரர் தர்மதுரை, சித்திக் தாக்கப்பட்ட இடத்தின் அருகே ஒரு பை கிடந்ததாகவும், அதில் ரூ.8 லட்சம் இருந்தாகவும் கூறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், அது சித்திக்கிடம் இருந்து ஆசாமிகள் பறித்து சென்ற பை என தெரிந்தது. அந்த பையில் இருந்து ரூ.9.91 லட்சத்தை தர்மதுரை உள்ளிட்ட சிலர் அபேஸ் செய்தது தெரிந்தது. அவரிடம் இருந்து அந்த பணத்தை மீட்டனர். மேலும், சித்திக் தாக்கப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்தனர்.

அதில், ஜாபர் என்பவர் தலைமையில் தமீம் அன்சாரி, முகமது அசார், முகமது பர்சாத் ஆகியோர் பணத்தை திருட திட்டம் வகுத்தது தெரிந்தது. மேலும், அனிஸ் அலுவலகத்தில் இருந்து யார் யார் எங்கு பணத்தை எடுத்து செல்கிறார்கள் என ஜாபர் என்பவர், மற்றவர்களுக்கு செல்போனில் தகவல் கொடுத்து வந்துள்ளார். இதுபோன்று பல நாட்கள் நடந்து வந்த நிலையில்தான், சித்திக்கை தாக்கி பணம் பறித்ததும், போலீசாருக்கு பயந்து பையை சாலையோரம் வீசியதும் தெரிந்தது.
இதையடுத்து பணம் பறித்த வழக்கில் தமீம் அன்சாரி, முகமது அசார், பார்த்திபன், வடிவேல், கிரிதரன், ரமேஷ், சுரேஷ் ஆகிய 7 பேர் மற்றும் 2 சிறுவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முகமது பர்சாத் மற்றும் முக்கிய குற்றவாளி ஜாபர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags : company ,children ,assault company employee , Company employee, attacker, Rs. 18 lakh, extortion case, children, 9 arrested
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...