×

ஜார்க்கண்டில் CAA-யை செயல்படுத்தமாட்டோம்: பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடியை அழைப்பேன்...ஹேமந்த் சோரன் பேட்டி

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வராக வரும் 29ம் தேதி பதவியேற்கவுள்ள ஹேமந்த் சோரன், மாநிலத்தில் குடியுரிமைச் திருத்த சட்டம் அமல்படுத்தப்படமாட்டாது என்று அறிவித்துள்ளார். பாஜகவின் ஐந்தாண்டு ஆட்சியை முடிவுக்கு கொண்டு  வரும் வகையில், ஜார்க்கண்ட் மாநில  சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது. எதிர்க்கட்சியான ஜே.எம்.எம்-காங்கிரஸ்-ஆர்.ஜே.டி கூட்டணி, பழங்குடியினர் அதிகம் உள்ள மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஜார்க்கண்ட்  மாநில முதல்வராக வரும் 29ம் தேதி பதவியேற்க உள்ள ஹேமந்த் சோரன், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மத்திய அரசு செயல்படுத்த விரும்பும் என்ஆர்சி மற்றும் சிஏஏ சட்ட ஆவணங்களை நான்  பார்க்கவில்லை.

மக்கள் இந்த சட்டங்களுக்கு எதிராக சாலைகளில் போராடுகின்றனர். நாங்கள் ஜார்க்கண்டில் அச்சட்டங்களை செயல்படுத்தமாட்டோம். இந்தச் சட்டத்தின்படி, ஒரு ஜார்கண்டி கூட அவரது வீட்டிலிருந்து வெளியேற்றப்படமாட்டார்கள் என்பதில்  அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். ஜார்க்கண்ட் தேர்தல் வெற்றியானது, ஜனநாயகத்திற்கான வெற்றி; பாஜக மாநிலத்தில் நடைமுறைப்படுத்திய பிளவு கொள்கைகளுக்கு எதிரானது. மாநிலத்தில் உள்ளூர் பிரச்னைகளுக்கு முன்னுரிமை  அளிக்கப்படும். அவர்களின் தேவைகளுக்கு தீர்வு காணப்படும்.

நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்க நில உரிமைச் சட்டத்தில் கவனம் செலுத்தப் போகிறேன். பொது விநியோக முறையுடன் ஆதாரை நீக்குவது மற்றும் பொது விநியோக முறையை மறுஆய்வு செய்து குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.  வேலை வாய்ப்பின்மையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது சுகாதாரம் மற்றும் கல்வி உள்கட்டமைப்பை புதுப்பிக்கப்படும். புதிய அரசாங்கத்தின் பங்களிப்பில் பழங்குடியினர், பின்தங்கியவர்கள் மற்றும் சிறுபான்மையினரின் நலன்  அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடிக்கு அழைப்பு:

ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 இடங்களிலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் 16 இடங்களிலும் ராஷ்டிரிய ஜனதா கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த பாஜ 25  இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதற்கு 41 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவிடம் தற்போது 47 இடங்கள் உள்ளன. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில், அக்கட்சியின் செயல் தலைவர்  ஹேமந்த் சோரன் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புதிய எம்எல்ஏ.க்கள் கூட்டம் கட்சியின் தலைவர் சிபு சோரன் தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை குழு  தலைவராக ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா கட்சியுடன் ஹேமந்த் சோரன் ஆலோசனை நடத்தினார். கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக்கு  பின்னர் ஹேமந்த் சோரன் ஆளுனர் திரவுபதி முர்மூவை  சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து வரும் 29ம் தேதி மதியம் 1 மணிக்கு அவர் முதல்வராக பதவியேற்கிறார்.

இந்நிலையில், டிசம்பர் 29ம் தேதி நடக்க உள்ள பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், அழைப்பு விடுத்தார்.  அழைப்பை ஏற்று சோனியா காந்தியும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பதவியேற்பு விழாவில்  பங்கேற்க அழைக்கவுள்ள ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.



Tags : CAA ,Jharkhand ,Hemant Soren Interview ,swearing-in , We will not implement CAA in Jharkhand: I will invite PM Modi to attend the swearing-in ... Hemant Soren Interview
× RELATED சிஏஏ சட்டத்தை ரத்து செய்வோம் மோடியை...