மும்பை: கடந்த 7 ஆண்டுகளில் முதல் முறையாக பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் சதவிகிதம் குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையின் படி அனைத்து வங்கிகளின் மொத்த வாராக்கடன் 11.2 சதவீதத்தில் இருந்து 9.1 சதவீதமாக குறைந்துள்ளது. பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 14.6 சதவீதத்தில் இருந்து 11.06 சதவீதமாக குறைந்துள்ளது. 7 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வந்த வாராக்கடன் விகிதம் முதல் முறையாக குறைந்திருந்தாலும் வங்கிகளின் கடனளிக்கும் திறன் பெரிய அளவில் மேம்படவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
பொதுத்துறை வங்கிகள் மூலதன தேவைக்காக அரசையே நம்பியிருக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதே போல் பொருளாதார தேக்கநிலை மக்களின் நுகர்வு சரிவு போன்றவற்றை கருத்தில் கொண்டு சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் அளிப்பதிலும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. மக்களின் நுகர்வு குறைவால் சிறுதொழில் நிறுவனங்களுக்கு அளித்த கடன்கள் பலவும் திருமப வராமல் போகும் ஆபத்து அதிகம் என்றும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
