×

உள்ளாட்சியில் நல்லாட்சி மலர திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பீர்: வீடியோ வெளியிட்டு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களிலும், 2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் முடிய 2 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உள்ளாட்சியில் நல்லாட்சி மலர திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பீர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; தமிழ்நாட்டில் 12,000க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்றன.

உள்ளாட்சித் தேர்தல் நடந்து, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் மக்கள் தங்கள் குறைகளைச் சொல்லி, அவையெல்லாம் அவ்வப்போது தீர்க்கப்பட்டிருக்கும். ஆனால் மக்கள் குறைகளுக்கு கணக்கில்லை. கேட்பதற்கும் நாதியற்று போய்விட்டது. அதனால்தான் நானும் தி.மு.க மூத்த நிர்வாகிகளும் எல்லா ஊராட்சிகளுக்கும் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தோம். நமது குறைகளைக் கேட்க தி.மு.க இருக்கிறது என்ற தைரியத்தில் அவர்களும் குறைகளைச் சொன்னார்கள். மக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்கள் மனதை வெல்வோம்” என்கிற முழக்கத்தைத்தான் அந்தப் பயணத்துக்கே பெயராகச் சூட்டி இருந்தோம்.

அதற்கேற்றாற் போல் மக்கள் மனதை முழுமையாக வென்றெடுத்த பயணமாகவே அந்தப் பயணம் அமைந்தது. உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடைபெற்றிருந்தால் இதில் 60 சதவீத குறைகள் எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும். தேர்தலை உரிய காலத்தில் நடத்தாதது யார் தவறு? அ.தி.மு.க அரசின் தவறுதானே!. எல்லா இடங்களிலும் குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவுமே சரியாக இல்லை. சுகாதாரச் சீர்கேடு தலைவிரித்து ஆடுகிறது. எங்கேயும் தேவையான அளவு குப்பைத் தொட்டிகளும் இல்லை. குப்பைகளை முறையாக அள்ளுவதுமில்லை. இதனால் டெங்கு, மலேரியா என பலவாறு நோய்கள் பரவுகின்றன.

தி.மு.க ஆட்சி என்றாலே உள்ளாட்சியில் நல்லாட்சி நடத்திய ஆட்சி என்பதை மக்களே ஏற்றுக் கொள்வார்கள். முதன்முதலாக உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, உள்ளாட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கக் கூடிய நிதியை 10 சதவிகிதமாக உயர்த்தியது, குடிசைகளே இல்லாத கிராமங்களை உருவாக்க கலைஞரின் வீடு வழங்கும் திட்டம்,. எல்லா கிராமங்களிலும், குளம், நூலகம், விளையாட்டு மைதானம், சுடுகாடு, குடிநீர்ப்பணிகள், சிமெண்ட் சாலைகள் அனைத்தையும் உருவாக்குவதற்கான பெரும் திட்டமான அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், 7000 கோடி ரூபாய் விவசாயக் கடன் ரத்து,

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிகளவில் கடன் கொடுத்தது என, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றியது திமுக ஆட்சிதான். இவை அனைத்தும் கலைஞர் அரசு செய்த சரித்திரச் சாதனைகள். கலைஞர் அவர்கள் ஆட்சியில் தமிழகம், அரிசி, கரும்பு, மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி, தொழில் வளர்ச்சி என்று பலவகையிலும் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது ஊழலில், லஞ்சத்தில், டெங்குகாய்ச்சலில், காசநோயில் என எவையெல்லாம் மக்களுக்கு எதிரானதோ அவற்றில் எல்லாம் முதலிடமாக உள்ளது. இதுதான் எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனை! இதனால் மக்களுக்குத்தான் வேதனை! என கூறினார்.

ஊழலாட்சிக்கு முடிவுகட்ட உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்பீர். நாளை நல்லாட்சி அமைய உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்பீர்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Voting ,coalition candidates ,Nallakshi Malankara DMK ,MK Stalin ,elections ,Lok Sabha , Local Government, DMK Alliance, MK Stalin
× RELATED ம.பி.யில் பேருந்தில் தீ : 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீக்கிரை