×

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக காந்தி நினைவிடத்தில் சத்தியாகிரக போராட்டம்: சோனியா தலைமையில் காங். தலைவர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக டெல்லி ராஜ்காட்டில் ‘ஒற்றுமைக்கான சத்தியாகிரகம்’ போராட்டத்தை காங்கிஸ் தலைவர் சோனியா நேற்று தொடங்கி வைத்தார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் உள்ள காந்தி நினைவிடமான ராஜ்காட்டில், ஒற்றுமைக்கான சத்தியாகிரக போராட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஏ.கே.அந்தோணி, அகமது படேல், குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, ஆனந்த் சர்மா, திக்விஜய் சிங், மீரா குமார், கே.சி.வேணுகோபால் உட்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கும், போலீஸ் அடக்குமுறைக்கு ஆளான இளைஞர்களுக்கும் ஒற்றுமையை தெரிவிப்பதற்காக இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையை சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோர் வாசித்தனர். பா.ஜ அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் காங்கிரஸ் தொண்டர்கள் ஒரு நிமிடம் மவுனம் அனுசரித்தனர். இந்த போராட்டம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் கூறுகையில், ‘‘அரசின் தவறான கொள்கைகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்த எங்கள் கட்சி தொண்டர்கள் கூடியுள்ளனர்’’ என்றார்.

அரசியல் சாசனத்தை காக்க தீர்மானம்:
போராட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குப்பின் சோனியா புறப்பட்டு சென்றுவிட்டார். அரசியல்சாசன முன்னுரையை இந்தியில் வாசித்த பிரியங்கா, பின்னர் அளித்த பேட்டியில் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தவர்களின் பெயரில் அரசியல் சாசனத்தை காக்க காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது. உ.பி பிஜ்னூரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அனாய் காபி விற்று தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆனது. இவர் இந்த போராட்டத்தில் இறந்துள்ளார். யுபிஎஸ்சி தேர்வுக்கு படித்துக் கொண்டு டீயூசன் எடுத்து வந்த 21 வயது சுலைமானும் இந்த போராட்டத்தில் பலியானார். நாட்டுக்கு தனது மகன் உயிர்த் தியாகம் செய்ததாக அவரது தாயார் என்னிடம் கண்ணீர் மல்க கூறினார். இந்த போராட்டத்தில் உயிர் இழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின் பெயரில் நாங்கள் அரசியல் சாசனத்தை காக்க தீர்மானித்துள்ளோம்’’ என்றார்.

ம.பி, ராஜஸ்தானில் அமல்படுத்த மாட்டோம்:
சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் சிங் தியோ ஆகியோர் தங்கள் மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை அமல்படுத்தப்படாது என்றனர்.

Tags : Gandhi Memorial against Citizenship Amendment Act: Sonia Leaders ,Gandhi Memorial in Satyagraha Struggle: Sonia Leaders Association , Citizenship Amendment Act, Against, Gandhi Memorial, Satyagraha Struggle, Sonia Chief, Cong. Leaders, Participation
× RELATED தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!