×

திருப்புவனம் அருகே திமுகவினர் முற்றுகை வாக்காளர்களுக்கு விநியோகிக்க லாரி மூலம் வெங்காயம் சப்ளை? 23 டன் சிக்கியது

திருப்புவனம்: திருப்புவனத்தில் 23 டன் வெங்காயத்துடன் லாரி சிக்கியுள்ளது. வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக வெங்காயம் கொண்டுவரப்பட்டதாக திமுகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் நான்குவழிச் சாலை நரிக்குடி ரோடு பிரிவில்  போக்குவரத்து போலீசார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெங்காய மூட்டைகள் ஏற்றிய லாரி ஒன்று வந்தது. போலீசார் கையை காட்டியும் லாரி நிற்காமல் மதுரை நோக்கி வேகமாக சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த போக்குவரத்து போலீசார் விரட்டி சென்று தட்டான்குளம் பகுதியில் லாரியை மடக்கினர்.

பதுக்கல் வெங்காயத்தை கடத்திக் கொண்டு போவதாக கருதி பொதுமக்கள் கூடிவிட்டனர். மேலும் தட்டான்குளம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக கூட்டணி சார்பில் தமாகா வேட்பாளர் போட்டியிடுகிறார். இவர் மதுரையில் வெங்காய மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர்தான் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வெங்காயத்தை கொண்டு வந்துள்ளார் என தகவல் பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தலைமையிலான திமுகவினர் லாரியை முற்றுகையிட்டனர். திருப்புவனம் தாசில்தார் மூர்த்தி, எஸ்ஐ பாலமுருகன் லாரி டிரைவரை பிடித்து விசாரித்தனர். பின்னர் லாரியை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

தாசில்தார் மூர்த்தி கூறுகையில், ‘‘இந்த லாரியை ராஜஸ்தானை சேர்ந்த டிரைவர் ஓட்டி வந்தார். அவர் கூறிய தகவலின்படி லாரி உரிமையாளரிடம் பேசினோம். குஜராத், அகமது நகரிலிருந்து தென்காசி அருகே உள்ள பாவாசத்திரத்துக்கு லாரி செல்வதாக தெரிவித்தார். இப்பகுதிக்கு வழிதவறி வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். லாரியில் 425 சிப்பத்தில் பெரிய வெங்காயம் 23 டன் இருப்பதாக பில் உள்ளது. மேலும் ஆவணங்களை லாரி உரிமையாளர்  கொண்டு வருகிறார். அதுவரை லாரியை தாலுகா அலுவலகத்தில் வைத்துள்ளோம். லாரியை எதற்காக நிறுத்தாமல் சென்றார் என்றும் விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.

Tags : voters ,Thirupavanam ,DMK , Turnover, DMK, siege, voter, distribute, by truck, onion supply? 23 tons stuck
× RELATED வாக்காளர்களை பிரிப்பதற்கு பிரதமர் முயற்சி: சரத்பவார் விமர்சனம்