×

இந்தியாவில் பிரச்சனை உண்டாக்க அண்டை நாடு தீவிர முயற்சி: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு

புதுடெல்லி: ‘‘நமது அண்டை நாடுகளில் ஒன்று, இந்தியாவில் அதிலும் குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் வேண்டுமென்றே பிரச்னையை உண்டாக்க முயற்சிக்கிறது’’ என்று மாணவிகளுடனான கலந்துரையாடலின் போது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஸ்ரீநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் 5 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளை ராஷ்டிரிய ரைபிள் படையினர் டெல்லி, ஆக்ராவுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து வந்துள்ளனர். இவர்களில் 30 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பின் போது நேற்று மாணவிகளிடம் கலந்துரையாடிய அவர் கூறியதாவது:
கல்வி சுற்றுலாவின் போது, நாட்டில் ஏற்பட்டுள்ள விரைவான மாற்றங்களை பார்த்திருப்பீர்கள். இந்த மாற்றங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. நமது அண்டை நாடுகளில் ஒன்று, இந்தியாவில் அதிலும் குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் வேண்டுமென்றே பிரச்னையை உண்டாக்க முயற்சிக்கிறது. தீவிரவாதத்துக்கு உடந்தையாக இருப்பது, நிதி, தஞ்சம் மற்றும் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற கொள்கையில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை. காஷ்மீர் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தீர்வு காண நமது அண்டை நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முயற்சித்து வருகிறது. பாகிஸ்தான் உள்பட அனைத்து நாடுகளுடனும் நல்ல நட்புறவையே இந்தியா விரும்புகிறது. போரின் மீது இந்தியாவுக்கு நம்பிக்கை இல்லை. அமைதியான சூழலையே இந்தியா விரும்புகிறது. ஜனநாயகத்தின் மீது இந்தியா நம்பிக்கை கொண்டிருப்பதால் தான், மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சி தேர்தல்கள் அவ்வபோது நடத்தப்படுகிறது. ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதும், தேர்தலை நடத்துவதும், நம்மை நாமே எப்படி ஆட்சி செய்கிறோம் என்பதுமே இந்தியாவின் சிறப்புக்குரிய அம்சமாகும். இவ்வாறு அவர் பேசினார். தீவிரவாதத்துக்கு உடந்தையாக இருப்பது, நிதி, தஞ்சம் மற்றும் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

Tags : Venkaiah Naidu ,Neighbors ,India ,talks , India, Problem, Neighborhood, Effort, Vice President Venkaiah Naidu, Speech
× RELATED வெங்கையாநாயுடு, மிதுன்...