×

சென்னை மாநகராட்சி பகுதிகளில் காலி மனை மீதான வரி செலுத்தாத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் காலி மனை மீதான வரி செலுத்தாத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் 12 லட்சம் கட்டிடங்களுக்கு சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் காலி இடங்களுக்கும் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. இதன்படி 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்களுக்கு ஒரு சதுர அடிக்கு 30 பைசா முதல் 1.50 ரூபாய் வரை வரி வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஓர் அரையாண்டுக்கு மாநகராட்சிக்கு 5 கோடி வருமானம் கிடைக்கிறது. இந்த காலி இடங்களில் பலர் குப்பை கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், மழைக்காலங்களில் இந்த காலி இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து, மக்களுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பரவுகிறது. இதனை தடுக்க கொசு உற்பத்தியாகும் நிலையில் உள்ள காலி இடங்களை அதன் உரிமையாளரே சுத்தப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. நில உரிமையாளர்கள் சுத்தப்படுத்தாவிட்டால் மாநகராட்சி சார்பில் சுத்தப்படுத்தி அதற்கு வழக்கமாக மாநகராட்சி தரப்பில் வசூலிக்கப்படுவதை விட 2 மடங்கு கட்டணம் அபராதமாக வசூலிக்க வேண்டும் என்றும் ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டார்.

இந்நிலையில் காலி இடங்களுக்கு முறையாக சொத்து வரி வசூலிக்கவும், கொசு உற்பத்திக்கு அபராதம் விதிக்கவும், காலி இடங்கள் தொடர்பான தகவலை சேகரிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், இணை ஆணையர் லலிதா, வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபு, திடக்கழிவு மேலாண்மை துறை தலைைமை ெபாறியாளர் மகேசன், கண்காணிப்பு பொறியாளர் வீரப்பன், கணினி மைய முதுநிலை மேலாளர் கிருஷ்ணகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது: சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டத்தின்படி காலி மனைகள் மீது வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. காலி மனை உரிமையாளர் அளிக்கும் விண்ணப்பத்தின் அடிப்படையிலும், மாநகராட்சியின் கள அலுவலர்களால் கள ஆய்வு மூலம் கண்டறிந்தும் இந்த வரி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு சில பகுதிகளில் உள்ள காலி மனைகளுக்கு அதன் உரிமையாளர்கள் வரி செலுத்துவதில்லை, என தெரியவந்துள்ளது.

எனவே உரிமையாளர்கள் தங்களது காலி மனை மீது வரி விதிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லையெனில், உரிமை கோரும் ஆவணங்களை உடனடியாக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பித்து, காலி மனை மீது வரி விதிக்க விண்ணப்பிக்க வேண்டும். காலி நிலத்திற்கு குறைந்தப்பட்சமாகவும்,  வியாபார நோக்குடன் பயன்படுத்தப்படும் காலி நிலத்திற்கு அதிகப்பட்சமாகவும்  வரி விதிக்கப்படும். வரி விதிப்பிற்கு உட்படாத காலி மனைகள் மீது உரிய சட்ட விதிகளின்படி வரி விதிப்புகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார். 


Tags : owners ,land ,area ,Commissioner ,Chennai Municipal ,Lands , Chennai Corporation, Area, Vacant Lands, Taxes, Owners, Action
× RELATED சென்னை காவல் துறையில் 21...