×

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொது இடங்களில் சுவரொட்டி ஒட்ட தடை: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் பொது இடங்களில் பதாகைகள், கொடிகள், சின்னங்கள் வரைதல் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றிடவும், தேர்தல் நடத்தை விதிகளின் படி பொது இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல்  தொடர்பான பதாகைகள், கொடிகள், சின்னங்கள் வரைதல் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டுவது தொடர்பாக பின்வரும் வரையறைகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு திறந்த வெளிகள் (உருக்குலைப்புத் தடுப்பு) சட்டம் 1959ல் பார்வையில்படும் பொது இடங்கள் என்பது, ஒரு பொது இடத்தில் இருக்கும் அல்லது கடந்து செல்லும் ஒரு நபரின் பார்வையில்படும் தனியார் இடம்/கட்டிடம் அடங்கும்.

இத்தகைய இடங்களில் உரிமையாளர்களின் அனுமதியிருந்தாலும், சுவரில் எழுதுவதோ, சுவரொட்டி போன்றவற்றை ஒட்டுவதோ கூடாது. ஓர் இடத்தின் உரிமையாளரின் சம்மதம் பெறப்பட்டுள்ளது என்ற காரணத்தின் அடிப்படையில் எந்த சூழ்நிலைகளிலும் சுவரில் எழுதுவதோ அல்லது சுவரொட்டி ஒட்டுவதோ கூடாது.  இவ்வாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Tags : places ,State Election Commission ,Elections , Local Elections, Contesting Candidates, Public Places, Posters
× RELATED போலி ஐடி மூலம் மெயில் அனுப்பிய மர்ம...