×

நடைபாதை கடைகள், டூவீலர்கள் நிறுத்தமாக மாறிய சிவகாசி பஸ் நிலையம்

* பயணிகள் பாடு திண்டாட்டம்;
* அவதிக்குள்ளாகும் ஓட்டுனர்கள்

சிவகாசி : சிவகாசி பஸ்நிலையத்தில் நடைபாதை கடைகள், டூவீலர்கள் நிறுத்தி  செல்வதால் கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்துக்கள்  ஏற்படும் ஆபத்து உள்ளது. சிவகாசி பஸ்நிலையம் சுமார் 2 ஏக்கர்  பரப்பில் அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும் 50க்கும் மேற்பட்ட அரசு நகர  பஸ்கள், 30க்கும் மேற்பட்ட அரசு புறநகர் பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள்  பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படுகிறது. பஸ் நிலையத்திற்கு தினமும்  ஆயரித்திற்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் வந்து  செல்கின்றனர்.

 வெளியூர் செல்லும் பஸ்களுக்கு தனியாக பேருந்து நிறுத்தங்கள்  அமைக்கப்பட்டுள்ளது. சிவகாசி பஸ்நிலையத்தில் உள்ளே இடநெருக்கடியால்  கடுமையான நெரிசல் ஏற்பட்டது. தற்போது புதிய பஸ்நிலைய விரிவாக்க பணிகள்  முழுமையாக முடிவடையாமல் கிடக்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சி  பிரமுகர்களின் ஆசியுடன் பஸ்நிலையத்தில் உள்ள சின்ன, சின்ன காலி இடங்களிலும் பழக்கடை, பெட்டிக்கடை அமைக்க நகராட்சி நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. பஸ்கள் நிற்கும் இடங்களில் ஸ்டால்கள் அமைத்து பூக்கடை  அமைத்துள்ளனர்.

பஸ் நின்று செல்லும் இடங்களில் டூவீலர்களை சிலர் தினமும்  நிறுத்தி செல்கின்றனர். இதனால் பஸ்கள் பஸ்நிலையத்தின் மைய பகுதியில் நின்று  பயணிகளை ஏற்றி செல்கிறது. நகராட்சி நிர்வாகம் பஸ்நிலையத்தில் உள்ள  ஆக்கிரமிப்புகள், டூவீலர்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பஸ்கள் வெளியே செல்லும் பாதையை ஆக்கிரமித்து வரிசையாக டூவீலர்களை நிறுத்தி  செல்கின்றனர். இதனால் பஸ்கள் வெளியே செல்ல சிரமப்படுகின்றன. சிவகாசி பஸ்  நிலையத்தில் காலை, மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  ஆனால் பயணிகள் பஸ் வரும்வரை அமர்ந்து செல்ல இருக்கை வசதி எதுவும் இல்லை.  இதானல் பயணிகள் மணிக்கணக்கில் நின்று கொண்டே பஸ்சுக்காக காத்திருந்து செல்ல  வேண்டிய அவலம் உள்ளது.

இதேபோல் சிவகாசி பஸ்நிலையத்தில் இலவச கழிப்பறை இல்லாததால்  திறந்த வெளியை மக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் பஸ்நிலையத்திற்குள்  துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. பஸ்நிலையம் வரும்  பயணிகளுக்கு தொற்றுநோய் பரவும் ஆபத்து உள்ளது. நகராட்சி நிர்வாகம் செயல்பாடின்றி முடங்கி கிடப்பதால் பஸ்நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி  வருகின்றனர்.


Tags : Sivakasi Bus Station ,sidewalk shops ,two-wheelers ,stand ,Sivakasi ,passengers ,bus stand , Sivakasi , Sivaksi Old bus stand,Two wheeler stand,passengers
× RELATED மூதாட்டியிடம் செயின் பறிப்பு