×

புதிய வீடு கட்ட வரைபட அனுமதி பெறுவதில் சிக்கல்

காரைக்குடி : காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்  முக்கிய வியாபார மையமாக விளங்குகிறது. ஆகவே காரைக்குடியில் ஆண்டு ஒன்றுக்கு 3000க்கும் அதிகமான புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் வீட்டு  மனைகளை வரன்முறைபடுத்த கால அவகாசம் கொடுக்கப்பட்டது. பலர் தங்களது மனைகளை வரன்முறை படுத்திக்கொண்ட நிலையில் இன்னும் 50% மனை உரிமையாளர்கள், போதிய விழிப்புணர்வு இல்லாததால்  வரன்முறை படுத்தவில்லை.

 தற்போது புதிய வீடுகள் கட்ட வரைபட அனுமதி வழங்க கோரிய விண்ணப்பங்களுக்கு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம பஞ்சாயத்துக்களில் வரைபட அனுமதி தர மறுக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை பல ஆயிரக்கணக்கான மனைகள் இன்னும்  வரன்முறை படுத்தப்படாமல் உள்ளன. இந்நிலையில், தமிழக அரசு அதற்கான கால அளவை நீட்டிக்காமல் கடந்த 10 மாதங்களாக நிறுத்தி வைத்துள்ளனர். கடந்த வருடம் ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் மனைகளை வரன்முறை படுத்தி கொடுக்கிறது.

பலர் தற்போது மனைகளை வரன்முறைபடுத்த முன் வரும் நிலையில் அதிகாரிகள் இன்னும் எங்களுக்கு அதுகுறித்து முறையான உத்தரவு வரவவில்லை என கூறி  திருப்பி அனுப்புகின்றனர். இதன் காரணமாக பலரது வீடுகட்டும் எண்ணம் நிறைவேறாமல் உள்ளது. பலர் மனை வரைபட அனுமதிக்கு கொடுத்தும் மாதக்கணக்கில் அனுமதி தராததால் கட்டிட வேலைகளை தொடங்க முடியாமல் உள்ளனர்.இதன்கரணமாக கொத்தனார், சித்தாள் போன்றோர் வேலையின்றி தவித்து வருகின்றனர். புதிய கட்டுமானங்கள் தொடங்கப்படாததால் அதை சார்ந்த தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : karaikudi , karaikudi ,new house,drawing permit
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க