×

குடியுரிமை சட்டம் மீது பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரிய கருத்து மம்தா மன்னிப்பு கேட்க வேண்டும் : மத்திய அமைச்சர்கள் ஆவேசம்

புதுடெல்லி:  குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக ஐநா முன்னிலையில் பொது வாக்கெடுப்பு நடத்த ேவண்டும் என்று கூறியதற்காக மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜ.வும், மத்திய அமைச்சர்களும் வலியுறுத்தி உள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் தொடர்கின்றன. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவே இந்த போராட்டத்தை முன்னின்று நடத்துகிறார். தொடர்ச்சியாக, பிரமாண்ட பேரணிகளை நடத்தி வருகின்றார். ‘நான் உயிரோடு இருக்கும் வரை மேற்கு வங்கத்தில் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும்  அனுமதிக்க மாட்டேன்,’ என்று கூறி வருகிறார். நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடந்த பேரணியில் பேசிய மம்தா, “பாஜ.வுக்கு தைரியம் இருந்தால், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து ஐநா.வின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதில் தோற்றால், ஆட்சியை விட்டு விலக வேண்டும்,’ என்று அறைகூவல் விடுத்தார். அவருடைய இந்த கருத்துக்கு பாஜ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், “ஐநா மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மம்தா பானர்ஜி கூறியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இது, நாட்டில் உள்ள 130 கோடி மக்களையும் அவமதிக்கும் செயலாகும். வாக்கெடுப்பை நடத்தவும், கண்காணிக்கவும்  ஐநா அமைப்பு யார்?  தனது கருத்துக்காக மம்தா மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்றார். மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கார் கூறுகையில், “முதல்வர் மம்தா பொதுகளத்தில் இதுபோன்று கூறியது வலியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. அவர் இருக்கும் பதவிக்கும், அனுபவத்துக்கும் இது ஏற்றதல்ல. அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும்,” என்றார். கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘‘மம்தாவின் கருத்து, இந்திய நாடாளுமன்றதை அவமதிக்கும் செயலாகும்,’’ என்றார். அதேபோல், மம்தாவின் இந்த கருத்துக்கு தேசிய அளவில் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

வாக்கெடுப்பு அல்ல; கருத்து கணிப்புதான் : மம்தா விளக்கம்

‘ஐநா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.’ என தான் கூறிய கருத்து சர்ச்சையாகி இருப்பதால் மம்தா நேற்று விளக்கம் அளித்துள்ளார். கொல்கத்தாவில் இப்பிரச்னை தொடர்பாக அவர் அளித்த பேட்டி: குடியுரிமை திருத்த சட்டத்தை ஏற்பது பற்றி, ஐநா.வின் மேற்பார்வையில் நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நான் கூறவில்லை. அதாவது, மனித உரிமைகள் ஆணையம் போன்ற அமைப்புகளின் வல்லுநர்களின் மேற்பார்வையில், மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட வேண்டும் என்றுதான் கூறினேன்.  மக்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டத்தையும், நாடு முழுவதுமாக செயல்படுத்த திட்டமிட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தையும் பிரதமர் மோடி திரும்ப பெற வேண்டும். இது, அரசியல் ரீதியாக யாருக்கும் கிடைக்கும் வெற்றியோ, தோல்வியோ கிடையாது.  இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் ஓட்டு போடவில்லை

கொல்கத்தாவில் நடந்த பேரணியில் மம்தா பேசியபோது, ‘‘ குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பிரதமர் வாக்களிக்கவில்லை. அப்படியென்றால், இதற்கு அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று தானே அர்த்தம். எனவே, குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக அவர் திரும்ப பெறவேண்டும்,” என்றார்.


Tags : Mamata , Mamata to apologize , referendum , citizenship law
× RELATED பெண் ஊழியருக்கு ஆளுநர் பாலியல்...