×

கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர் மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவல் கண்டுபிடிப்பு: தீவிர தடுப்பு நடவடிக்கையில் கேரள அரசு

திருவனந்தபுரம் : கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர் மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனையை நாட கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. வெஸ்ட் நைல் காய்ச்சல் கண்டறியப்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு சீசனுக்கும் வெவ்வேறு விதமான நோய்கள் பரவுவதும், அதனை தேசிய மற்றும் மாநில சுகாதாரத்துறை கட்டுப்படுத்துவதும் வழக்கமாக நடக்கும் ஒன்று தான். அந்த வகையில் தற்போது கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அம்மாநிலத்தில் திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார். மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உஷாராக இருக்கும்படி அனைத்து மாவட்ட நிர்வாகத்தினருக்கும் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில் ஒருபகுதியாக கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழிக்குமாறும், நோய் பாதிப்பை கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கியூலெக்ஸ் என்ற கொசு வகை மூலம் இத்தைய வெஸ்ட் நைஸ் காய்ச்சல் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடையேயும் நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த மாநில சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவுவதால் மக்கள் அச்சப்பட வேண்டாம். காய்ச்சல் அல்லது நோய் தொற்றின் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சைப் பெற வேண்டும். இந்த பாதிப்பில் காய்ச்சல், தலைவலி, நினைவாற்றல் இழப்பு, தசைவலி உள்ளிட்ட பெரும் பாதிப்புகள் உண்டாகக்கூடும்.

ஆனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு நோய்களுக்கான அறிகுறிகள் இல்லை. இந்த தொற்றால் இறப்பு விகிதம் ஓப்பிட்டளவில் குறைவு தான் என்றாலும் இதற்கான தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்து என்பது இல்லை என்பதால் சுகாதாரம் என்பதே முக்கியமான ஒன்றாக உள்ளது. மக்களும் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1937 ஆம் ஆண்டு வெஸ்ட் நைல் காய்ச்சல் உகாண்டாவில் கண்டறியப்பட்டது. ஆனால் கடந்த 2011 ஆம் ஆண்டு தான் கேரளாவில் கண்டறியப்பட்டது. 2019ல் மலப்புரத்தைச் சேர்ந்த சிறுவன் காய்ச்சலால் உயிரிழந்தான். இதனைத் தொடர்ந்து 2022ல் திருச்சூர் மாவட்டத்தில் 47 வயதுமிக்க ஒருவர் மரணமடைந்தார் என்பதால் கேரளா அரசு இந்த காய்ச்சல் பரவ தொடங்கியதை உறுதி செய்ததும் தீவிரமாக தடுப்பு நடவடிக்கையில் களம் கண்டுள்ளது.

The post கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர் மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவல் கண்டுபிடிப்பு: தீவிர தடுப்பு நடவடிக்கையில் கேரள அரசு appeared first on Dinakaran.

Tags :
× RELATED நீதித்துறை விடுமுறைகள் குறித்து...