×

ஐபிஎல் சூதாட்டத்தில் லஞ்சம் பெற்ற வழக்கு ஐபிஎஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் விடுதலை: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் சிக்கியவர்களை விடுதலை செய்ய லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து சென்னை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதில் பல முக்கிய புள்ளிகள் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. அதன்படி சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பட்டியலை போலீசார் தயார் செய்து, கவுதம் சந்த் நிமானி, மகாவீர் சந்த், பாப்பு, உத்தம் சி.ஜெயின் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இவர்களை சூதாட்ட வழக்கில் இருந்து விடுவிக்க ஏற்பாடு செய்வதாக கூறி தொழிலதிபர்கள், மகேந்திரசிங் ரங்கா, நேமிசந்த், ஹிராகுமார் ஆகிய மூன்று பேர் வழக்கில் சிக்கியவர்களிடம்  ₹1 கோடியே 35 லட்சம் வசூல் செய்ததாகவும். அதில் 60 லட்சத்தை, வழக்கை விசாரித்து வந்த கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டான ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு வழங்கியதாகவும் புகார் எழுந்தது. இந்த புகார் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைதொடர்ந்து, இது குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் மற்றும் லஞ்சம் வழங்கியதாக கூறிய தொழிலதிபர்கள்  மகேந்திரசிங் ரங்கா, நேமிசந்த், ஹிராகுமார் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.  பின்னர் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சம்பத்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனைதொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்றது. அதில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் 81 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. இந்தநிலையில் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு, சாட்சி விசாரணை, அனைத்து தரப்பு வாதங்கள் என அனைத்தும் முடிவடைந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு நீதிமன்ற நீதிபதி  ஒம் பிரகாஷ் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை அரசு தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவில்லை. எனவே இந்த வழக்கில் சம்பத்குமார் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்வதாக கூறி உத்தரவிட்டார்.

Tags : persons ,IPL ,IPS ,officer ,gamblers , IPL gambling, bribery, 4 people acquitted, court
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி