×

தடைமீறி குடியுரிமை திருத்த சட்டத்ைத கண்டித்து போராட்டம் திருமாவளவன், நடிகர் சித்தார்த் உட்பட 800 பேர் மீது வழக்குப்பதிவு: நுங்கம்பாக்கம் போலீசார் நடவடிக்கை

சென்னை: தடையை மீறி குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன், நடிகர் சித்தார்த் உட்பட 54 இயக்கங்களை சேர்ந்த 800 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து, ெசன்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடத்த முஸ்லிம் அமைப்புகள் உட்பட 54 அமைப்புகள் சார்பில் போலீசாரிடம் அனுமதி கோரினர். ஆனால் அனுமதி தர போலீசார் மறுத்துவிட்டனர். இதை தொடர்ந்து 54 அமைப்புகள் ஒன்று சேர்ந்து, குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான கூட்டமைப்பு என்ற பெயரில் தடையை மீறி நேற்று முன்தினம் மாலை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடத்தினர்.

இதில் விசிக தலைவர் திருமாவளவன்,  நடிகர் சித்தார்த், அம்பேத்கர் பொதுவுடமை முன்னணி மாநில அமைப்பு குழு உறுப்பினர் சாலமன், சாதி ஒழிப்பு முன்னணி திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் ஜெயநேசன், தென்னிந்திய பெண்கள் திரைத்துறை மையம் ஈஸ்வரி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் கிரேஸ்பானு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சுந்தரவள்ளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செல்வா, எஸ்டிபிஐ கட்சி சார்பில் தெகலான் பார்கவி, ஆம் ஆத்மி கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பார்த்திபன், தமிழ் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் சமந்தா உட்பட 800 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில், நுங்கம்பாக்கம் போலீசார் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக விசிக தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த் மற்றும் 54 அமைப்புகளை சேர்ந்த   800 பேர் மீது ஐபிசி 143, 41(6) சிபி ஆக்ட் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜவாஹிருல்லா  உட்பட 3ஆயிரம் பேர் மீது வழக்கு
குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து கடந்த 18ம் தேதி மாலை மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டை  முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக முதல்வர் வீட்டை நோக்கி சென்ற அனைவரையும் போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஜவாஹிருல்லா உட்பட 3 ஆயிரம் பேர் மீது பட்டினப்பாக்கம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனை நேற்று முன்தினம் பெரியார் திராவிடர் கழகத்தை ேசர்ந்த 37 பேர் முற்றுகை மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 34 பேர் மீது ஐபிசி 151, 143, 341, 41(6) சட்ட பிரிவு உட்பட 4 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு ெசய்துள்ளனர்.


Tags : Siddharth Edit ,Thirumavalavan , Citizenship Amendment Act, Struggle Thirumavalavan, Actor Siddharth
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு