×

கலெக்டர் உத்தரவை மீறி கட்டணம் வசூலிப்பதா? டோல்கேட்டில் கார் உரிமையாளர்கள் குடும்பத்துடன் நள்ளிரவு போராட்டம்

* 3 நிமிடத்துக்கு மேல் நிறுத்தியதால் கட்டணம் செலுத்த மறுப்பு
* திருமங்கலம் அருகே கப்பலூரில் வாக்குவாதங்களால் பரபரப்பு

திருமங்கலம்: கலெக்டர் உத்தரவை மீறி கப்பலூர் டோல்கேட்டில் டி.கல்லுப்பட்டிக்கு செல்லும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதாக கூறி, வாகன உரிமையாளர் குடும்பத்துடன் நள்ளிரவில் போராட்டம் நடத்திய சம்பவம் திருமங்கலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. 3 நிமிடத்துக்கு மேல் நெரிசலில் தவிக்கவிட்டதால், கட்டணம் செலுத்தமுடியாது என்று மற்ெறாரு கார் உரிமையாளர் வாக்குவாதம் செய்தார். மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே வன்னிவேலம்பட்டியை சேர்ந்தவர் அழகர். நேற்று முன்தினம் இவர் மதுரைக்கு குடும்பத்துடன் தனக்கு சொந்தமான காரில் சென்று மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளார். இரவு 11 மணியளவில் கப்பலூர் டோல்கேட் முதலாவது கவுன்ட்டரை இவரது கார் கடந்தபோது டோல்கேட் ஊழியர்கள் அவரிடம் சுங்கக்கட்டணம் கேட்டுள்ளனர்.

இதற்கு அழகர், ‘‘சில தினங்களுக்கு முன்பு மதுரையில் கலெக்டர் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதி வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். எனவே கட்டணம் செலுத்த முடியாது’’ என கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்த டோல்கேட் ஊழியர்கள், அவரது வாகனத்தை விட மறுக்கவே, ஆத்திரமடைந்த அழகர் தனது குடும்பத்தினருடன் காரை விட்டு இறங்கி டோல்கேட்டில் போராட்டத்தில் ஈடுபட்டார். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேல் இவர்களது போராட்டம் நடந்ததால், பின்னால் வரிசையில் இருந்த வாகனங்கள் ஸ்தம்பித்து, வெகு தொலைவுக்கு நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, வரிசையில் இருந்த வாகனங்களை ஊழியர்கள் அடுத்தடுத்த கவுன்ட்டர்களுக்கு திருப்பியனுப்பினர். இதனால், அனைத்து கவுன்ட்டர்களிலும் கடுமையான வாகன ெநரிசல் ஏற்பட்டது.

அப்போது டோல்கேட் 2வது கவுன்டரில் வந்த விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த செல்வத்திடம் ஊழியர்கள் கட்டணம் கேட்டனர். அதற்கு அவர், ‘‘3 நிமிடத்திற்கு மேல் வாகனங்கள் டோல்கேட்டில் நின்றால் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற விதி உள்ளது. சுமார் அரை மணிநேரத்திற்கு மேல் நான் வாகனத்துடன் நிற்கிறேன். எனவே, கட்டணம் செலுத்த முடியாது’’ எனக்கூறி டோல்கேட் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த திருமங்கலம் டவுன் போலீசார், டோல்கேட்டிற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து குடும்பத்துடன் போராட்டம் நடத்திய அழகரிடம், டோல்கேட் ஊழியர்கள் கட்டணம் வசூலிக்காமல் அனுப்பி வைத்தனர்.  இந்த இரு சம்பவங்களால், நள்ளிரவு நேரத்தில் கப்பலூர் டோல்கேட்டில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.


Tags : collector ,car owners family ,fight , Collector orders, tollgate, car owners, struggle
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...