×

பணம் எடுத்து தருவதாக நடித்து கைவரிசை: ஒரத்தநாடு பெண் அரசு ஊழியரின் ஏடிஎம் கார்டில் ரூ.1 லட்சம் சுருட்டிய கில்லாடி

ஒரத்தநாடு: ஒரத்தநாடு அரசு பெண் ஊழியரின் ஏடிஎம் கார்டை ஏமாற்றி வாங்கி ரூ.1 லட்சம் சுருட்டிய கில்லாடியை போலீசார் தேடி வருகிறார்கள். இவர் தஞ்சையில் நகை வாங்கிய காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. அதைக்கொண்டு அந்த நபரை தேடி வருகிறார்கள். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஒக்கநாடு மேலையூர் கிராமம் மழவராயர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மனைவி கலைச்செல்வி. இவர் ஒரத்தநாடு அருகே உள்ள வெள்ளூர் அரசு பிற்பட்டோர் நலத்துறை மாணவிகள் விடுதியில் சமையலர் ஆக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று ஒரத்தநாடு நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றார்.

அப்போது, ஏடிஎம் கார்டை மெஷினில் போட்டு எடுக்கும்போது பணம் கிடைப்பதில் தாமதம் ஆனதால் அருகிலிருந்த ஒரு நபர் நான் உதவி செய்கிறேன் என்று ஏடிஎம் கார்டை கேட்டிருக்கிறார். இதனால் கலைச்செல்வி ஏடிஎம் கார்டை அவரிடம் கொடுத்திருக்கிறார். பணத்தை எடுக்க முயற்சி செய்வது போல நடித்து இறுதியாக பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஏடிஎம் கார்டை கலைச்செல்வியிடம் இடம் கொடுத்து விட்டு அந்த மர்ம நபர் ஏடிஎம் மையத்தை விட்டு வெளியே சென்றுவிட்டார். பணம் எடுக்காமல் கலைச்செல்வி வீடு திரும்பி சென்று விட்டார். நேற்று இரவு தனது தொலைபேசி நம்பருக்கு எஸ்எம்எஸ் செய்தி வந்தபோது தனது அக்கவுண்டில் இருந்து ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டு இருந்தது கலைச்செல்விக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி உடனடியாக ஒரத்தநாடு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மேலாளரிடம் புகார் செய்தார். தொடர்ந்து, ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திலும்
புகார் கொடுத்தார்.

போலீசார் ஆய்வு செய்தபோது தஞ்சை சூரக்கோட்டை அருகே உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் இருந்து கலைச்செல்வி கணக்கில் பணம் எடுக்கப்பட்டதும், மீதமுள்ள பணத்திற்கு தஞ்சையில் உள்ள ஒரு நகைக்கடையில் பணம் வாங்கியதும் தெரியவந்தது. மொத்தமாக ₹1 லட்சம் அந்த ஆசாமி சுருட்டியது தெரியவந்தது. கலைச்செல்விக்கு ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க உதவுவது போல நடித்து அவரது ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு வேறு கார்டை கொடுத்து அவர் ஏமாற்றியது தெரியவந்தது. அவருக்கு 40 வயது இருக்கும். டிப்டாப் ஆசாமியான இவர் ஒரத்தநாடு பகுதியில் அடிக்கடி இதுபோல கைவரிசை காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

Tags : government employee ,ATM , ATM
× RELATED கிருஷ்ணகிரியை அடுத்த...