×

திருவாரூர் அடுத்த அம்மையப்பனில் மூடப்பட்ட மருத்துவமனை மீண்டும் திறக்கப்படுமா?

திருவாரூர் : திருவாரூர் அருகே அம்மையப்பனில் மூடப்பட்டுள்ள ஒன்றிய மருத்துவமனையை மீண்டும் திறக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மையப்பனில் இயங்கி வந்த ஒன்றிய மருத்துவமனையில் அம்மையப்பன், அத்தி சோழமங்கலம், மலையூர், கிருஷ்ணாபுரம், தாழைக்குடி, திருக்கண்ணமங்கை, தென்பாதி, காவனூர், கருப்பூர், திருக்கண்ணமங்கை மற்றும் முகந்தனூர் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 6 ஆண்டு காலமாக இந்த மருத்துவமனை செயல்படாததன் காரணமாக மேற்படி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதுடன் அருகில் 5 கி.மீ தூரத்தில் இருந்து வரும் குளிக்கரை மருத்துவமனை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றிற்கு ஆட்டோ மூலம் செல்வதற்கு ரூ.200 வரை செலவழிக்க வேண்டிய நிலையில் இருந்து வருவதால், பாமர மக்கள் மற்றும் விவசாய கூலிகள் உட்பட அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இந்த மருத்துவமனையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற அரசு ஊழியரும் அம்மையப்பன் வர்த்தக சங்க தலைவருமான லட்சுமணன் என்பவர் கூறுகையில், கடந்த 1947ம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே இந்த மருத்துவமனை அம்மையப்பன் கிராமத்தில் இயங்கி வந்தது. இதன் மூலம் மொத்தம் 15 கிராமங்களை சேர்ந்த 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலனடைந்து வந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த மருத்துவமனையானது கடந்த 6 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வருகிறது. இதுகுறித்து ஒன்றிய அலுவலகத்தில் கேட்டபோது ஒன்றிய மருத்துவமனைகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 ஆனால் பல்வேறு ஒன்றியங்களில் இதுபோன்று மூடப்பட்ட மருத்துவமனைகளுக்கு பதில் அதே இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்த மருத்துவமனை மட்டும் ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்படாமல் இருந்து வருகிறது. மேலும் இந்த மருத்துவமனையை திறக்கக் கோரி பலமுறை உண்ணாவிரதம், கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி இந்த மருத்துவமனையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு ஒன்றிய நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் கூறுகையில், இந்த மருத்துவமனை இயங்கிவந்த அம்மையப்பன் என்பது தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியவாறு இருந்து வருகிறது. தற்போது மக்கள் தொகை மற்றும் வாகனப் பெருக்கம் போன்றவை காரணமாக விபத்துகள் என்பது தினந்தோறும் நடைபெறுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதலுதவி சிகிச்சை எடுப்பதற்கு கூட மருத்துவமனை இல்லாமல் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை நாட வேண்டிய நிலையில் மக்கள் இருந்து வருகின்றனர்.

எனவே விபத்து போன்ற காலங்களில் முதலுதவி சிகிச்சை எடுப்பதற்கும் பிரசவ காலத்தின் போது அவசர சிகிச்சைக்கும் பயன்படும் வகையில் இந்த மருத்துவமனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : government hospital ,Thiruvarur Hospital ,thiruvarur , thiruvarur ,government Hospital,People demand,Closed
× RELATED செங்கல்பட்டு ஜிஹெச் வளாகத்தில்...