×

பாளை மத்திய சிறையில் கைதிகளுக்கு தேனீ, காடை வளர்ப்பு பயிற்சி துவக்கம்

*சிறைத்துறை டிஐஜி பழனி தகவல்

நெல்லை : தமிழகத்திலுள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் மறுவாழ்வுக்கென பல்வேறு கைத்தொழில் மற்றும் விவசாயம் உள்ளிட்ட தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. சிறை வளாகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பங்கு கைதிகளுக்கு வழங்கப்படுகிறது. நெல்லை உள்ளிட்ட சில சிறைகள் மூலம் பெட்ரோல் பங்க்குகளும் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் நெல்லை சிறையில் கைதிகளுக்கு தேனீ, காடை வளர்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான துவக்க விழா பாளை மத்திய சிறையில் நேற்று நடந்தது. சிறைத்துறை டிஐஜி பழனி பங்கேற்று பயிற்சியை துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; பாளை மத்திய சிறையில் கைதிகளின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்க்கையை மனதில் கொண்டும், அவர்களுக்கு வருமானம் கிடைக்கும் வகையிலும் ஹாலோ பிளாக்,  பேவர் பிளாக் கற்கள் தயாரிக்கும் பணி ஏற்கனவே நடந்து வருகிறது.  இந்த கற்கள், அரசுத்துறை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இதுபோல் பிராய்லர் கோழி வளர்ப்பு பண்ணையும் உள்ளது. பண்ணனையை கைதிகள், பராமரித்து வருகின்றனர்.  இறைச்சிக்காக பிராய்லர் கோழி விற்பனை செய்யப்படுகிறது. மேலும் முறுக்கு, மிக்சர், இனிப்பு உள்ளிட்ட  தின்பண்டங்கள் தயாரித்து இங்கு கடைகள் அமைத்து விற்பனை செய்யப்படுகிறது. சிறையில் உள்ள 4 தோட்டங்களில் வாழை, காய்கறிகள், கனிகள் பயிரிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பாளை சிறையில் காடை வளர்ப்பு, ேதனீ வளர்ப்பு குறித்த பயிற்சியும் துவங்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவர்கள் மற்றும் தேனீ வளர்ப்போர் அமைப்பு மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பின் இங்குள்ள தோட்டத்தில் தேனீக்கள், காடை பண்ணை அமைக்கப்படும். இதன் மூலம் பொதுமக்களுக்கு கலப்படம் இல்லாத தேன், காடைகள் விற்பனை செய்யப்படும். மேலும் சிறை வளாகத்தில் பூக்கள், பழமரக்கன்றுகள் விற்பனைக்காக நர்சரி கார்டன் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஒரு ஏக்கரில் நெல்பயிர் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணெய் பயிர்களும் விளைவிக்கப்பட்டுள்ளது. இதில் வீட்டு உபயோகத்திற்காக விரைவில் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் உற்பத்தி துவங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறைத்துறை சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு கைதிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அதன் அருகில் ஆவின் பால் விற்பனை மற்றும் பால் பொருட்கள் விற்பனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது பாளை சிறைத்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், ஜெயிலர் பரசுராமன் ஆகியோர் உடனிருந்தனர்.


Tags : Quail Farming Initiative for Prisoners ,Bee ,Quail Training Going ,Pallai Central Prison In Palayamkkottai Central Jail Prisoners , Palayamkkottai ,Central Jail,Prisoners ,Bee
× RELATED இந்திய – வங்கதேச எல்லையில்...