×

பேரணாம்பட்டு அரசு பள்ளிகளில் அழுகிய முட்டைகள் விநியோகம்

*முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு

வேலூர் :  பேரணாம்பட்டு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அழுகிய முட்டை விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோல், முட்டை விநியோகத்தில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேரணாம்பட்டு ஒன்றியத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி என 140க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகிறது.   இந்த பள்ளிகளுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான முட்டைகளை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வார தொடக்க நாட்களில் அந்தந்த பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

அவ்வாறு, நாள்தோறும் விநியோகம் செய்யப்படும் முட்டைகளை தினமும் உணவு நேரத்தில் மாணவர்களுக்கு வேக வைத்து வழங்கப்படுகிறது. அதில் 10 முதல் 30 வரை அழுகிய முட்டைகளை மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.  மேலும், சில மாணவர்களுக்கு முட்டை கிடைப்பதில்லையாம்.  அழுகிய முட்டைகளை உண்பதால் சில மாணவர்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தால் ஒன்று இரண்டு அப்படித்தான் வரும் என்று அலட்சியமாக தெரிவிக்கின்றனராம்.  அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை  எடுப்பதில்லை என்று மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பேரணாம்பட்டு தரைக்காடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுமார் 76 மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இப்பள்ளி துவங்கிய கடந்த ஓராண்டாக மாணவர்களுக்கு மதிய சத்துணவு வழங்கவில்லை.
இதுகுறித்து கடந்த செப்டம்பர் மாதம் தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அக்டோபர் மாதம் முதல் மாணவர்களுக்கு மதிய சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்பள்ளியில் நேற்று மதியம் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட முட்டைகளில் 30க்கும் மேற்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்தது.அதேபோல் சிவராஜ் நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும் விநியோகம் செய்யப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்தது.

இதனால் முட்டைகளை பெற்ற மாணவர்கள் அவற்றை சாப்பிடாமல் வெளியில் வீசி எறிந்தனர்.பெரும்பாலான அரசு பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர்கள் இல்லாததால் 2, 3  பள்ளிகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு அமைப்பாளர் தான் உள்ளார். இதனால், அரசின் சத்துணவும்,  முட்டை வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.   எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Government schools ,pernampet , pernampet,Government School,Rotten eggs ,students
× RELATED சென்னையில் இணையவசதியுடன் 200...