×

சந்திரயான்-3 திட்ட இயக்குநராக விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் நியமனம்: விண்வெளியில் தொடரும் தமிழர்கள் சாதனை

விழுப்புரம், : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழகத்தின் அப்துல்கலாம், சிவதாணுபிள்ளை, மயில்சாமி அண்ணாதுரை, சிவன் ஆகியோர் இடம்பெற்று சாதனை படைத்துள்ளனர். அந்த வரிசையில் மேலும் ஒரு தமிழராக விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல்(வயது 41) இடம் பிடித்துள்ளார். சந்திரயான்-3 திட்டத்தை இயக்கப்போகும் திட்ட இயக்குநர் பொறுப்பை இஸ்ரோ இவரிடம் ஒப்படைத்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு பெருமை கிடைத்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ராணுவம், விண்வெளி, விமானம் உள்ளிட்ட ஆராய்ச்சி துறைகளில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டார். ஏவுகணை உருவாக்கம் இவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. இவரை தொடர்ந்து, நாகர்கோவிலை சேர்ந்த சிவதாணுப்பிள்ளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் சேவையாற்றினார். அதன்பின், பொள்ளாச்சியைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை சந்திரயான்-1 திட்டஇயக்குநராக பணியாற்றி நிலவில் தண்ணீர் இருப்பதை அறிந்து உலகிற்கு முதல் தகவலை தெரிவித்தார்.

அவரைதொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சிவன் சந்திரயான்-2 திட்ட இயக்குநராக பணியாற்றி ஆர்பிட்டரை வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தி சாதனை படைத்தார். இந்தநிலையில், சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக விழுப்புரத்தை  சேர்ந்த வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்தாண்டு நவம்பர் மாதத்தில் சந்திரயான் -3 விண்கலனை நிலவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலை தொடர்புகொண்டபோது, தலைமை அதிகாரிகள் அனுமதியின்றி எந்தவொரு தகவலையும் இப்போது என்னால் கூறமுடியாது என தெரிவித்தார். தற்போது வீரமுத்துவேல் பெங்களூரில் வசித்து வருகிறார்.

Tags : Project Director ,Villupuram ,Tamils ,space , Chandrayaan-3, Project Director, Villupuram, Veeramuthuvel, Appointed
× RELATED விழுப்புரம் மொரட்டாண்டி...