×

பொது இடங்களில் இறைச்சிக்கழிவு கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: பொது இடங்களில் இறைச்சிக் கழிவுகள்  கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, பல்லாவரம் அடுத்த பம்மல் நகராட்சி எம்.ஜி.ஆர் பிரதான சாலையில் இறைச்சி மற்றும் தோல் கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுவதாகவும், அதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும் பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது. இதனை நீதிபதி ராமகிருஷ்ணன் தலைமையிலான தென்மண்டல பசுமைத் தீர்ப்பாய அமர்வு தாமாக முன்வந்து விசாரித்தது. இந்த வழக்கில் பம்மல் நகராட்சி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர்கள், செய்தியை பார்த்ததும் இறைச்சி மற்றும் தோல் கழிவுகள் முற்றிலும் அகற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய நீதிபதி ராமகிருஷ்ணன், இந்த இறைச்சி மற்றும் தோல் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி அப்பகுதி மக்கள் உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என கருத்து தெரிவித்தார். பம்மல் நகராட்சி ஆணையர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர்,  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆகிய மூவர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த குழு  பம்மல் சுற்று வட்டாரத்தில் இறைச்சி மற்றும் தோல் கழிவுகள் கொட்டப்படுகிறதா எனவும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.


Tags : places ,Southwest National Green Tribunal Directive , Public Places, Meat Factory, Southwest National Green Tribunal
× RELATED செங்கல்பட்டில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் பூட்டை உடைத்து கொள்ளை