×

நாய் கடித்ததால் ‘குணம் மாறியது’: கோயில்காளை ருத்ரதாண்டவம்

திருவாடானை: திருவாடானை அருகே நாய் கடித்ததால் ஆவேசமடைந்த கோயில்காளையால், கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் பரிதவித்தனர். தீயணைப்பு துறையினர் வந்து காளையை பிடித்தப் பிறகே நிம்மதியடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கோடனூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கோயில் காளை ஒன்று வசித்து வருகிறது. கோயில் காளை என்பதால், விவசாய நிலத்தில் மேய்ந்தால் கூட அதை யாரும் அடிப்பது கிடையாது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த கோயில் காளையை நாய் ஒன்று கடித்துள்ளது.

இதன்பின்னர் காளையின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. நேற்று, பார்த்தவர்களை எல்லாம் குத்தவும், கடிக்கவும் துரத்தியது. அங்கு இருந்த மரத்தில் தன் கொம்புகளைக் கொண்டு குத்தி கிழித்தது. இதில் மரத்தின் தூர் பகுதியில் உள்ள பட்டை அனைத்தும் பெயர்ந்து விட்டது. இதனை பார்த்த கிராம மக்கள் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று ஓடி ஒளிந்தனர். காளையின் ரூத்ர தாண்டவத்தால் வீட்டை பூட்டிக்கொண்டு கிராம மக்கள் வெளியே வரவே இல்லை. பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப முடியாமல் பரிதவித்தனர்.

இதுபற்றி திருவாடானை தாசில்தார் சேகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் திருவாடானை தீயணைப்பு துறையினர் வந்து, பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு கோயில் காளையை கயிறு போட்டு பிடித்து கட்டினர். அதன்பிறகே மக்கள் நிம்மதியடைந்தனர். பின்னர் திருவாடானை கால்நடை மருத்துவர் வந்து காளைக்கு மயக்க ஊசி போட்ட சிறிது நேரத்தில் காளை இறந்தது. கோயில்காளை இறந்ததால், கிராமம் சோகத்தில் மூழ்கியது.

Tags : Dog , Bull
× RELATED உதகையில் தேசிய நாய்கள் கண்காட்சி!!