×

ஐதராபாத் பெண் டாக்டர் டிஷா கொலை வழக்கில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட 4 பேருக்கு 9 கொலையில் தொடர்பு : விசாரணையில் பகீர் தகவல்கள்

திருமலை: ஐதராபாத் பெண் டாக்டர் டிஷா கொலை வழக்கில் என்கவுன்டர் செய்யப்பட்ட 4 பேருக்கு 9 கொலைகளில் தொடர்பிருப்பதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐதராபாத் அடுத்த சம்ஷாபாத்தை சேர்ந்த கால்நடை டாக்டர் டிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த என்கவுன்டருக்கு முன்பு போலீசாரிடம் குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தில் டிஷா கொலை வழக்கிற்கு முன்பாக 9 கொலைகளை இதேபோன்று செய்ததாக தெரிவித்துள்ளனர். மெகபூப் நகர், சங்காரெட்டி, ரங்காரெட்டி, ஐதராபாத், கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் இந்த கொலைகளை செய்ததாகவும், இதில் முகமது ஆரிப் 6 கொலைகளும், சென்னகேசவா 3  கொலைகளும் செய்திருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கூறியது போன்று அந்த பகுதியில் இதேபோன்று 17 வழக்குகள் பதிவானது தெரியவந்தது. இதையடுத்து இந்த 17 வழக்குகளில் குற்றவாளிகளின் டிஎன்ஏவும், கொலை செய்யப்பட்டவர்களின் டிஎன்ஏவையும்  சோதனை செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆனால், 17 பேரில் பலரின் உடல்கள் முழுவதும் எரிந்ததால் டிஎன்ஏ சோதனை செய்ய சிரமம் ஏற்பட்டுள்ளதால் அதிநவீன தொழில்நுட்பத்தில் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே என்கவுன்டர் நடப்பதற்கு முன்பு  ஐதராபாத் காவல்துறை ஆணையாளர் சஞ்சனார், 4 பேர் மீதும் ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த 9 கொலைகளுக்கும் ஆதாரங்களை திரட்டி டிஷா கொலை வழக்கு குற்றவாளிகள் வழக்கில் சேர்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கேற்ப தடயங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Hyderabad ,persons ,encounter , 4 persons killed , encounter , Hyderabad murder case
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்