×

பறவை வாழ்க்கையில் தங்குமிடமே கூடு: இன்று சர்வதேச புலம் பெயர்தல் தினம்

‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ -  என்பது போல, இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும், சந்தர்ப்ப சூழ்நிலைகள், வாழ்வாதாரம் கருதி தன் நாடை விட்டு, வேறு நாட்டுக்கு இடம் பெயர்கிறான். பூர்வகுடி என்று நாம் யாருமே சொல்ல முடியாத அளவுக்கு, ஒவ்வொருவரும் பிழைப்பு தேடி வந்து, அங்கேயே நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் அதிகம். ஆரம்ப காலத்தில் தமிழர்கள் பிழைப்பு தேடி பர்மா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று வாழத்தொடங்கினர். அங்குள்ள சூழல் மாறும்போது, குடும்பத்துடன் வேறு நாடுகளுக்கு சென்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இலங்கை போரின்போது தமிழகத்தில் அகதிகளாக பல்லாயிரக்கணக்கானோர் தஞ்சமடைந்தனர். இப்படி தன் நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு சென்று, வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கான தினமே சர்வதேச புலம் பெயர்தல் தினம். இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் டிச.18ம் தேதி கொண்டாடப்படுகிறது.

புலம் பெயர்தலை இருவகைகளாக பிரிக்கலாம். இயற்கை பேரிடரால் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் விரக்தியடைந்து வெளியேறுதல், மற்றொன்று தொடர் போர், அதனால் ஏற்படும் அமைதியின்மை போன்ற காரணங்களால் வெளியேறுதல் என 2 வகைகள் உண்டு. இலங்கையில் நடந்து வந்த போரால், அங்கு வாழ்ந்து வந்த ஏராளமானோர் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் குடியேறினர். சிரியா, இஸ்ரேல், பாலஸ்தீனம் நாடுகளில் நடக்கும் உள்நாட்டு கலவரங்களால் லட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர்கின்றனர். சிரியாவில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். வாழ்வாதாரம் தேடி வெளிநாடுகளுக்கு புலம் பெயர்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் முதலில் தனியாக செல்வார்கள். பின் தன் குடும்பத்தை இணைப்பார்கள். தொடர்ந்து தங்களது நெருங்கிய உறவினர்களை அழைப்பார்கள். பின்னர் அங்கேயே குடியுரிமை பெற்று வாழத்தொடங்கி விடுவார்கள்.

1960-70 காலகட்டத்தில் பெரும்பாலான இந்தியர்கள் பிழைப்புக்காக வளைகுடா நாடுகளுக்கு படை எடுத்தனர். பின், படிப்படியாக, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லத் தொடங்கினர். சுமார் மூன்று கோடி மக்கள்தொகை கொண்ட கனடா நாட்டில் 2.5 சதவிகிதமும், அமெரிக்காவில் சுமார் 6 சதவிகிதமும், அரபு நாடுகளில் சுமார் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் புலம் பெயர்ந்த இந்தியர்கள் வாழ்கின்றனர். இந்தியர்கள் அதிகமாக புலம்பெயர்ந்து செல்லும் நாடு அமெரிக்கா.

பிரபல ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள புலம் பெயர்ந்த மக்கள் தொடர்பான அறிக்கையின்படி, சுமார் 25 கோடி பேர், புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வாழ்வதாக தெரிவித்துள்ளது. இது உலக மக்கள் தொகையில் சுமார் 3 சதவிகிதத்துக்கும் மேலாகும். பறவை போன்ற நமது வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. சொந்தமுமில்லை. தங்குமிடமே கூடு என வாழும் மனநிலைக்கு மனிதன் வந்து ஆண்டுகள் ஓடி விட்டன. உலகம் முழுவதும் பிறந்த நாட்டை விட்டு, வேறொரு நாட்டுக்கு புலம் பெயர்வது, 15 ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் புலம் பெயரும் நாடுகளின், மக்கள் தொகை அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது, அந்த நாடுகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. கடந்த, 2000 - 15ம் ஆண்டு வரையிலான காலத்தில், வட அமெரிக்காவின் மக்கள் தொகையில், 42 சதவீதம் புலம் பெயர்ந்தவர்களாக உள்ளனர்.

பல்வேறு காரணங்களுக்காக, பிறந்த நாட்டை விட்டு, மற்றொரு நாட்டுக்கு புலம் பெயர்வதில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த, 1.7 கோடி பேர், வேறொரு நாட்டுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். அதில், 50 லட்சம் பேர், வளைகுடா நாடுகளில் உள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்சில் 30 லட்சம் பேர், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவுக்கு, தலா, 20 லட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர்.

Tags : International Migration Day , International Migration Day
× RELATED ஓஎம்ஆரில் ரூ1000 கோடி மதிப்பு ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு