×

தேன்கனிக்கோட்டை அருகே ராகி வயல்களை குறிவைத்து 70 யானைகள் அட்டகாசம்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை  அருகே முகாமிட்டுள்ள 70 யானைகள், ராகி வயல்களை குறிவைத்து தொடர்  அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கர்நாடக  மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட  யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டு தாவரகரை, நொகனூர்,  மரகட்டா, ஏணிமுச்சந்திரம், லக்கசந்திரம் உள்ளிட்ட கிராமங்களில் முகாமிட்டு ராகி, தக்காளி,  பீன்ஸ், கேரட், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்று நாசம் செய்து  வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம்,  கெலமங்கலம் அருகே ஊடேதுர்க்கம் காப்புக்காடு வழியாக வந்த 70 யானைகள் 4  பிரிவாக பிரிந்து நெருப்புகுட்டை, காடு உத்தனப்பள்ளி, அஞ்செட்டிதுர்க்கம்,  தேன்துர்க்கம், ஜெக்கேரி ஆகிய கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ராகி,  நெல் வயல்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்தன.

நேற்று முன்தினம்  மாலை, காடுலக்கசந்திரம், மேகலகவுண்டனூர், திம்மசந்திரம் வழியாக மாரசந்திரம்  கிராம பகுதியில் ராகி வயல்களில் புகுந்து அட்டகாசம் செய்தன. தகவலறிந்து  வந்த தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர், பட்டாசு  வெடித்து நொகனூர் வனப்பகுதிக்கு விரட்டினர். ஆனால்,  நொகனூர் வனத்திற்கு சென்ற யானைகள் விடியற்காலை மீண்டும் சானமாவு  வனப்பகுதியை நோக்கி பேவநத்தம் வனப்பகுதிக்குள் சென்றன.

ஓசூர்:கடந்த  2 நாட்களுக்கு  முன்பு, 3 குட்டிகளுடன் பிள்ளைகொத்தூர் ஏரி மற்றும் விளை நிலங்களில்  சுற்றி திரிந்த 12 யானைகள், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை கடந்து  சூளகிரி வனப்பகுதிக்கு சென்றன. பின்னர், அங்கிருந்து கிருஷ்ணகிரி  வனப்பகுதிக்கு உட்பட்ட மகராஜகடை வனப்பகுதிக்கு சென்று முகாமிட்டிருந்த  யானைகள் நேற்று அதிகாலை கோலார் வனப்பகுதிக்கு சென்றன. ஓசூர் வனப்பகுதியில்  தற்போது 15க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு  நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறி, பயிர்களை நாசம் செய்வதை வாடிக்கையாக  கொண்டுள்ளன. இதனால், யானை கூட்டத்தை கர்நாடகா மாநிலத்திற்கு விரட்ட  வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த சில வருடங்களாக, நவம்பர் முதல் பிப்ரவரி வரை, தொடர்ந்து இந்த பகுதியில்  வந்து முகாமிடுவதை யானைகள் வழக்கமாக கொண்டுள்ளன. கர்ப்பிணி யானைகளுக்கும், குட்டி  ஈன்ற யானைகளுக்கும் ராகி அத்தியாவசியமான உணவு என்பதால், மற்ற பயிர்களை காட்டிலும் ராகியை தான் அதிகம்  விரும்பி உண்கிறது. எனவே, வனப்பகுதியில் உள்ள சமவெளிகளில் ராகியை  பயிரிட அரசு நடவடிக்கை வரவேண்டும். மேலும், யானைகள் வரும் பகுதியில் அகழிகள் வெட்ட வேண்டும்,’ என்றனர்.

Tags : fields ,Thenkanikottai Elephants , Elephants
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை