×

சுங்கான்கடை, பூதப்பாண்டி பகுதியில் வாழைக்குலைகளை நாசமாக்கும் குரங்குகள்

திங்கள்சந்தை: சுங்கான்கடை, பூதப்பாண்டி பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. அவை வாழைக்குலைகளை கடித்து நாசப்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குமரியில் நெல் விவசாயத்திற்கு அடுத்து முக்கிய தொழிலாக கருதப்படுவது வாழை விவசாயம். இங்கு விளையும் செவ்வாழை, ஏத்தன், மட்டி, கதளி ஆகியவைகளுக்கு வெளி மாவட்டங்களிலும் அதிக மவுசு உண்டு. இங்கு வாழை விவசாயம் பல ஆயிரம் ஏக்கரில் நடக்கிறது. கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை உள்ள விவசாயிகள் பெரும்பாலும் செவ்வாழை மரங்களையே அதிகம் விரும்பி பயிர் செய்கின்றனர்.

சமீபகாலமாக அதிகாலை கடும் பனி, பிற்பகல் கடும் வெயில் போன்ற சீதோஷ்ண நிலை காரணமாக வாழை காய்களின் தோல்கள் கருப்பு நிறமாக மாறி பாதிக்கப்படுகிறது. ஆகவே பழம் தரமாக இருந்தாலும் சந்தையில் விலைபோகாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு போதிய வருமானமும் கிடைப்பதில்லை. இதுஒருபுறம் இருக்க தற்போது பூச்சி மற்றும் குரங்குகளின் அட்டகாசத்தால் வாழை விவசாயம் கடுமையாக பாதிப்படைந்து இருக்கிறது. வழக்கமாக விவசாயிகள் குலை தள்ளும் வாழைகளை பூச்சிகள் மற்றும் சீதோஷ்ண நிலையில் இருந்து பாதுகாக்க, தென்னை ஓலையில் பின்னப்பட்ட வல்லுவம், வாழை சருகுகள் கொண்டு குலையை பொதிந்து வைப்பார்கள். தற்போது இந்த பணியை செய்ய செலவு அதிகமாகி விடுகிறது. இந்த செலவை குறைக்கும் வகையில் பிளாஸ்டிக் சாக்கு பைகளை கொண்டு குலைகளை பொதிந்து வைக்கின்றனர்.

இந்நிலையில் வாழை தோட்டங்களில் புகும் குரங்குகள் சாக்கு பைகளை லாவகமாக எடுத்து விட்டு பழங்களை சாப்பிடுகிறது. அதோடு இல்லாமல் குலைகளை நாசமும் செய்துவிட்டு செல்வது வாடிக்கையாகிவிட்டது. சுங்கான்கடை, தோட்டியோடு, வில்லுக்குறி, புலியூர்குறிச்சி, காஞ்சிரவிளை உள்பட பல்வேறு பகுதியில் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டுள்ள வாழைகளுக்கு இதே போன்ற பிரச்னை ஏற்பட்டுள்ளது. பூதப்பாண்டியை அடுத்த நாவல்காடு பகுதியில் குரங்கள் வாழை தோப்புக்குள் புகுந்து சேதப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது: வாழை தோப்புகளில் தற்போது குரங்கு கூட்டங்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை. இதனால் வாழை குலையை முழுமையாக அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு வாழைகளை தாக்கும் பூச்சி இனங்களை அழிக்க வேண்டும். குரங்குகளிடம் இருந்து விளைநிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : area ,Poothapandi , Banana, Monkeys
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி